Saturday, November 22, 2008

வீடு விற்பது எளிது (இனிது)

வீடு விற்க வேண்டுமென்றால் வரி விளம்பரத்தை மட்டுமே நாடிக் கொண்டிருப்பது அந்த காலம். இப்போது அதை விட சுவாரசியமான ஒரு வழி அறிமுகமாகி இருக்கிறது.
இந்த வழியின் மூலம் வீட்டை விற்பது எளிமையானது மட்டுமல்ல, மிகவும் இனிமையானது. அதை விட 
வீட்டை வாங்குவது மிகவும் இனிமையானது
அமெரிக்காவை சேர்ந்த விஸ்வாக்ஸ் எனும் இணையதளம் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையின் மூலம் விற்கப்படும் வீடுகளுக்காக பிரத்யேக விளம்பரத்தை தயாரித்து வெளியிடலாம்.

விளம்பரம் என்றால் சாதாரண விளம்பரம் அல்ல. வீட்டின் அருமை, பெருமைகளை காட்சி ரீதியாக படம்பிடித்துக் காட்டும் வீடியோ விளம்பரம். அதாவது நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை பறைசாற்ற டிவி விளம்பரங்களை வெளியிடுவது போல வீட்டின் உரிமையாளர்களை தங்கள் வீட்டிற்கான விளம்பரத்தை தயாரித்து வெளியிடலாம்.

இதற்காகென்று முதலில் வீட்டுக்காக என்று தனியே ஒரு இணையதள முகவரி உருவாக்கி தரப்படும். ஓராண்டுக்கு அந்த முகவரி அமலில் இருக்கும். அந்த இணையதளத்தில் சென்று பார்த்தால் வீட்டின் புகைப்படம் மற்றும் வீடியோ படத்தை காணலாம்.
வீடு வாங்க செல்பவர்கள் நேரில் பார்க்கும் போது எத்தகைய உணர்வை பெறுவார்களோ அத்தகைய உணர்வை இந்த வீடியோ பார்ப்பதன் மூலம் பெறலாம். வீட்டை சுற்றிக் காண்பிப்பது போல கேமரா மூலம் காட்சிகள் அமைந்திருக்கும். 

விற்கப்படும் வீட்டின் சிறப்பு இயல்புகளை சம்பந்தப்பட்ட உரிமையாளரோ அல்லது இடைத் தரகரோ பின்னணியில் விளக்கிக் கொண்டே வருவார். இதன் மூலம் அந்த வீட்டின் தன்மையை சரியாக தெரிந்து கொள்வதன் மூலம் சொல்லப்படும் விஷயங்கள் உண்மைதானா என்பதை காட்சி ரீதியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

எனவே படித்தது ஒன்று; பார்த்தது ஒன்று என்ற ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. வீட்டின் உரிமையாளர்கள் தங்களது வீட்டின் விசேஷ அம்சங்களை மிக அழகாக வீடியோ படங்களின் மூலம் உணர்த்தி விடலாம். 

அதே நேரத்தில் வீட்டை வாங்க உத்தேசித்திருப்பவர்கள் நேரில் சென்று பார்க்காமலேயே வீடியோவின் மூலமே வீட்டின் தன்மையை தெரிந்து கொள்ளலாம். இது சுவாரசியமாகத்தானே இருக்கும்.

இப்படி விரிவான வீடியோ படத்தை எடுப்பதற்காக கையில் வீடியோ கேமராவுடன் வீட்டை வலம் வர வேண்டுமென்ற தேவையில்லை. இதற்கு மிகவும் செலவாகுமே என்ற கவலையும் வேண்டாம்.

வீட்டின் பல்வேறு காட்சிகளை புகைப்படமாக சமர்ப்பித்தால் போதும் விஸ்வாக்ஸ் இணையதளத்தில் உள்ள விசேஷ சாப்ட்வேர் அதனை கொண்டு அழகாக வீடியோ படத்தை தயார் செய்து கொடுத்து விடும். அதில் பின்னணி குரலை சேர்த்துக் கொண்டால் கச்சிதமான முழு விளம்பரம் தயாராகி விடும்.

பின்னர் அந்த விளம்பரம் வீட்டுக்கான விசேஷ இணைய முகவரியில் இடம் பெற்றிருக்கும். இந்த வகையான விளம்பரத்துடன் விற்பனைக்கு வந்த வீடுகள் உடனடியாக விற்று விட்டதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

நிச்சயம் வரி விளம்பரங்களை விட இது வீடுகளை விற்க சுவாரசியமான வழியென்றே கருதப்படுகிறது. தாரண வீடுகளை விட விசேஷமான வீடுகளுக்கு இந்த வகை விளம்பரங்கள் பொருத்தமாக இருக்கும். அதிலும் தங்கள் வீடுகள் பற்றி பெருமிதம் கொள்பவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். 

வீடு உருவான விதம் குறித்த கதைகள் இருந்தால் அதனையும் பின்னணியில் தெரிவித்து வாங்குபவர்களை கவரலாம். ஸ்வாக்ஸ் நிறுவனம், வீடுகளை விற்பதற்காக மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களுக்கும் இது போன்ற சேவையை வழங்கி வருகிறது. வீட்டில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சிகளையும் இந்த சாப்ட்வேரின் மூலம் வீடியோ படமாக தயார் செய்து கொள்ளலாம்.

அதே போல கலைஞர்கள் தங்களது படைப்புகளை வீடியோ படமாக தயாரித்து மற்றவர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கலாம். இப்படி தயார் செய்த படங்களை மை ஸ்பேஸ் பக்கத்தில் இடம் பெற வைக்கலாம். இமெயில் மூலம் நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கலாம். இப்படி பல விதமான வசதிகள் இருக்கின்றன.

விஸ்வாக்ஸ் நிறுவனம் மூலமே கோல்ட் மைல் டாட் காம் எனும் இணையதளம், இமெயில்களுக்கான விசேஷ சேவையை வழங்குகிறது. ந்த சேவையில் அனுப்பப்படும் இமெயில்களோடு குரல் பின்னணியையும் இணைத்து அனுப்பலாம். 

இதே போல இணையதளங்களில் உள்ள தகவல்களுக்கும் இந்த சேவை மூலம் குரல் பின்னணியை ஏற்படுத்தி தர முடியும். மெயிலின் அடுத்த பரிமாணம் என்று இதனை கோல்ட் மைல் நிறுவனம் வர்ணிக்கிறது.

Friday, November 21, 2008

இது கூகுல் திரைப்படம்

நடிகராக இருந்து இயக்குனராக மாறிய அமெரிக்காவின் ஜிம் கில்லீன் (பெயர் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா, அதில்தான் விஷயமும் இருக்கிறது) படம் ஒன்றை எடுத்திருக்கிறார்.
.
இந்த படம் உலக மகா காவியமோ அல்லது வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றிபெற்ற படமோ இல்லை. சாதாரண செய்திப்பட வகையை சேர்ந்ததுதான். ஆனால் இந்த செய்திப் படத்தை பலரும் பார்க்கக்கூடிய வகையில் மிகவும் சுவாரசியமான முறையில் அதனை எடுத்திருக்கிறார்.இந்த செய்திப்படத்தின் உள்ளடக்கமும், அது எடுக்கப்பட்ட விதமும்தான் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஜிம் கில்லீனை நடிகர் என்று சொல்வதை விட, நடிகராக முயற்சித்தவர் என்றோ அல்லது முயற்சித்து தோல்வி யடைந்தவர் என்றோ கூறலாம்.ஹாலிவுட் கனவு நிறைவேறாததால், வெறுத்துப்போன அவர் மசாஜ் செய்பவராக பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார். இதன் நடுவேதான் அவர் கூகுலில் தன்னைத்தானே தேடும் செயலில் ஈடுபடுத்திக் கொண்டார்.அதாவது, கூகுல் தேடியந்திரத்தில் தனது பெயரை டைப் செய்துவிட்டு, அது தரும் முடிவுகளில் தன்னைப் பற்றிய அறிமுகம் எத்தகையதாக இருக்கிறது என பார்த்துக் கொண்டிருந்தார்.ஜிம் கில்லீனைப்போல உலகம் முழுவதும் பலர் இப்படி கூகுலில் தங்களைத்தாங்களே தேடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஈகோ சர்பிங் என்று பெயரும் சூட்டப் பட்டுள்ளது. தமிழில் சொல்வதானால், தன்முனைப்புத்தேடல். தன்முனைப்பு தாகம் தீர்வதற்கான செயல் அல்லது நேரத்தை கொல்வதற்கான முயற்சி என்றெல்லாம் இது குறிப்பிடப்படுகிறது. என்றாலும் பலர் இந்த செயலில் ஆர்வத்தோடு ஈடுபடுகின்றனர். ஒரு சிலர் தேடலை தங்களோடு முடித்துக் கொள்ளாமல், தங்களை போன்ற பெயரைக்கொண்டவர்கள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள முற்படுவதும் உண்டு. இப்படித்தான் அமெரிக்காவை சேர்ந்த ஆமி ஸ்மித் என்பவர் தன் பெயர் கொண்டவர்களை கூகுல் மூலம் தேடி சந்தித்து அதுபற்றி சுவையான கட்டுரை ஒன்றை எழுதினார். தற்போது கில்லீன், இதேபோன்ற செயலில் ஈடுபட்டு கூகுல் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு செய்திப்படம்ஒன்றை எடுத்திருக்கிறார்.இந்த படம் மிகவும் சுவாரசியமாக வந்துள்ளது. இதற்கான எண்ணம் அவருக்கு ஏற்பட்ட விதமும் சுவாரசியமானதுதான். ஒருநாள் இலக்கில்லாமல் இன்டெர்நெட்டில் உலாவிக்கொண்டிருந்தபோது,உலகில் தன்னுடைய நிலையை அறிந்துகொள்ளும் உத்தேசத்தோடு கூகுல் தேடியந்திரத்தில் தனது பெயரை டைப் செய்து பார்த்தார். தன்னைப்பற்றிய அறிமுகம் எப்படி இருக்கிறது என தெரிந்துகொள்வதுதான் அவருடைய எண்ணம். ஆனால் அவரே சற்றும் எதிர்பாராத வகையில், அவரது பெயரில் பல ஜிம் கில்லீன்கள் இருப்பதை கூகுல் முடிவுகள் பட்டியலிட்டுக்காட்டின. அது மட்டுமல்லாமல், அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தனர்.அந்த நொடியிலேயே அவருக்கு தனது பெயரைக்கொண்டவர்கள் என்பதாலேயே அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது. அவர்களையெல்லாம் சந்தித்து பேச வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது.அடுத்த நிமிடமே, அவர்களைத்தேடி புறப்பட்டுவிட்டார். முதலில் அயர்லாந்தில் உள்ள ஜிம்கில்லீனை தேடிச்சென்றார். இப்படி கூகுல் மூலம் தனக்கு தெரிய வந்த 26 ஜிம் கில்லீன்களில் பலரை தேடிச்சென்று பார்த்தார்.ஒவ்வொருவரிடமும் குறிப்பிட்ட சில கேள்விகளைக் கேட்டு அவர்கள் அளித்த பதில்களை பதிவு செய்துகொண்டார். இந்த காட்சிகளையெல்லாம் ஒன்றாக சேர்த்து "கூகுல்மீ' என்னும் செய்திப்படத்தை உருவாக்கினார்.இந்த படத்தை யூ டியூப் தளத்தின் மூலம் அவர் வெளியிட்டு பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதற்காகவென்று தனியே ஒரு இணையதளத்தையும் உருவாக்கி அதில் இந்த செய்திப்படத்தின் டிவிடிக்களையும் விற்பனை செய்வதாக அறிவித்திருக்கிறார். முகம் தெரியாத நடிகராக இருந்த அவர், இந்த முயற்சியின் மூலம் ஒரு இயக்குனராக பலருக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்.அவருடைய இந்த செய்திப்படம் சிந்தனையை தூண்டுவதாக இருப்பதாக பாராட்டப்பட்டிருக்கிறது. இன்டெர்நெட் யுகத்தில் சாத்தியமாகும் புதுமையான அனுபவத்தை இந்த முயற்சி உணர்த்துவதாக பலரும் கருதுகின்றனர்.இந்த முயற்சியில் ஈடுபட்ட ஜிம் கில்லீனே கூட தனக்கு புதிய உலகிற்கான வாசல்கள் இதன்மூலம் திறந்துவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். "பெயரளவில்' மட்டுமே தொடர்புடைய அறிமுகம் இல்லாத நபர்களை சந்தித்து பேசிய அனுபவம் புதிய விஷயங்களை புரிய வைத்திருக்கிறது என்று கூறிய அவர், பெயர் என்பதன் பின்னே உள்ள முக்கியத்துவம் மற்றும் அர்த்தம் பற்றிய புரிதலும் மாறியிருக்கிறது என்கிறார்.கில்லீனைப்போல யார் வேண்டுமானாலும் கூகுலில் சுய தேடலில் ஈடுபடலாம். ஆனால் அதற்கு பெயர் ராசி மிகவும் முக்கியம். அதவாது அந்த பெயர் மிகவும் பரவலாக வைக்கப்படும் பெயராக இருக்கக்கூடாது. அதேநேரத்தில், யாரோ சிலர் மட்டுமே வைத்திருக்கக்கூடிய பெயராக இருக்கக்கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட அளவுக்கு இருந்தால்தான் கூகுலில் தேடி சந்தித்துப்பேசுவது சாத்தியம். ஜிம் கில்லீன் அத்தகைய பெயர்தான்.

சாட்டையடி இணைய தளம்

ஒரு பக்க இணைய தளங்களில் மிகச் சிறந்த இணைய தளம் என்று அந்த தளத்தை குறிப்பிடலாம். தற்காலிக இணைய தளம், சாட் டையடி (தரும்) தளம், என்றெல்லாம் அந்த தளத்தை வர்ணிக்கலாம். எப்படி குறிப்பிட்டாலும் அந்த தளம் ஆகச் சிறந்த தளங்களில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.
.
ஒற்றை குறிக்கோளோடு ஒரே ஒரு பக்கம் கொண்டதாக அமைக்கப்பட் டுள்ள அந்த இணைய தளத்தில் அதிக விஷயங்கள் கிடையாது. ஒரே ஒரு நீண்ட விளக்கம் மட்டும் தான்!அந்த விளக்கத்தை அளித்திருப்பவர் "கேரி டீன்' என்னும் இங்கிலாந்து கோடீஸ்வரர். டீன் 19 ஆண்டு மணவாழ்க்கைக்கு பிறகு தனது மனைவி ஹெலனை விவாகரத்து செய்திருக்கிறார். விவாகரத்து தொடர்பான விளக்கம் அளிப்பதற்காக தான், டீன்டைவர்ஸ் (deandivorce.com) என்னும் பெயரில் ஒரு பக்க இணைய தளத்தை அமைத்திருக்கிறார்.யார் இந்த டீன்? அவர் தனது மனைவியை விவாகரத்து செய்தால் யாருக்கு என்ன? அதற்காக ஏன் இந்த தளத்தை அவர் அமைக்க வேண்டும்? அவர் தரும் விளக்கத்தை கேட்க யாருக்கு ஆதரவு இருக்கிறது?எல்லாமே சரியான கேள்விகள் தான்! உண்மையில் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டிருந்தால் டீன் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். ஆனால் வேறு கேள்விகள் அவரை நோக்கி கேட்கப் பட்டதாலேயே டீன் தனது விவாகரத்து பற்றி விளக்கம் அளிக்க முன் வந்தார்.கோடீஸ்வரர் சாபம் என்று உலகில் ஒன்று உண்டல்லவா? அதற்கு டீனும் இலக்கானார். அதாவது, பிரபலமாக இருப்பவர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றி பேசுவதில் பொது மக்களுக்கு அலாதியான ஆனந்தம் உண்டா யிற்றே! இந்த ஆர்வத்துக்கு பத்திரிகைகளும் தீனி போட, மெய்யோ, பொய்யோ என்று கூட யோசிக்காமல், இல்லாததையும், பொல்லாததையும் பேசுவதுண்டு!டீன் விவாகரத்து செய்த பிறகு அவரைப்பற்றியும் இப்படி தான் பேசிக் கொண்டனர். கோடீஸ்வரரான டீன், தனது மாஜி மனைவியிடம் கஞ்சத்தனமாக நடந்து கொண்டதாகவும், பெரும் செல்வம் இருந்தும் போதிய ஜீவனாம்சம் வழங்க வில்லை என்பதுதான் இந்த பேச்சுக் களின் சாரம்சம். இது எந்த அளவுக்கு சரி என்றெல்லாம் யாரும் யோசித்துப் பார்த்ததாக தெரிய வில்லை. ஆனால் கேரிடீனை பேராசைக்காரர் என்றும் கல் நெஞ்சக்காரர் என்றும் பேசிக் கொண்டனர். இப்படி ஊரே புரளி பேசும் போதும் பெரிய மனிதர்கள் என்ன செய்ய முடியும்!எத்தனையே பிரபலங்களும், பெரிய மனிதர்களும் இத்தகைய தனி மனித தாக்குதலுக்கு இலக்காகி இருக்கின் றனர். அவர்களில் யாருமே செய்யாத விஷயத்தை கேரி டீன் செய்ய தீர்மானித்தார். வதங்களின் ஊற்றுக்கண்ணை அடைக்கும் வகையில் தானே விளக்கம் அளித்து விடுவதே சரியென நினைத்த டீன், இதற்காக டீன்வெர்ஸ் டாட்காம் தளத்தை அமைத்து, அதில் தனது விவாகரத்து ஒப்பந்த விவரங்களை நீதிமன்ற ஆவணத்தில் உள்ளது உள்ளபடியே இடம் பெற வைத்து விட்டார்.டீன் மற்றும் ஹெலன் டீன் விவாகரத்து பற்றிய உண்மைகள் என்னும் தலைப்பிலான அந்த விளக் கத்தை அவர் தொடங்கியிருந்த விதமே அற்புதமாக இருந்தது. கொஞ்சம் கவித்துவமாகவும் இருந்தது."விவாகரத்து புள்ளி விவரத்தில் ஒரு எண்ணிக்கையாகும் விருப்பத்தோடு யாரும் திருமணம் செய்து கொள்வ தில்லை. நிச்சயம் நான் அப்படி செய்து கொள்ளவில்லை. ஆனால் விவாகரத்து இன்றைய வாழ்க்கையின் அங்கமாகி விட்டது. எல்லாம் மாறுகிறது. மனிதர்கள் மாறுகின்றனர் நான் மாறியிருக்கிறேன். இந்த ஆரம்ப வரிகளே நேர்மையான விளக்கத்துக்கு அவர் தயராக இருப் பதை உணர்த்தி விடுகிறது அல்லவா? எதற்காக இந்தவிளக்கம் என கூற முற்படும் அடுத்த வரிகளில், அவர் சாட்டையை கையில் எடுத்துக் கொள்கிறார். இந்த தளத்தை நான் அமைத்ததற் கான காரணம் ஒன்றே ஒன்றுதான் எனது விவாகரத்து விவரங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொரு வருக்கும் அது தொடர்பான உண் மையை தெரிவிப்பது தான் இதன் நோக்கம். கேரியாராக இருந்தால் என்ன? ஹெலன் யாராக இருந்தால் என்ன? என் விவாகரத்து பற்றி ஒருவரும் கவலைப் படாமல் இருந்தால் நன்றாக தான் இருந்திருக்கும் என்று மென்மையாக ஆவேசப்படும் டீன் உண்மை என்ன வென்று தெரியாமலேயே பலரும் பேசிக் கொண்டிருப்பதாகவும் இதெல் லாம் எப்படி தொடங்கியது என்றே தெரியவில்லை, எனவும் குறிப்பிடுகிறார்.வதந்திகள் எப்படி தொடங்கியது என்பதை விட அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே முக்கியம் என்றும் கூறியுள்ள டீன் "மோச மானவன், பேராசைக்காரன், இதயமில் லாதவன்' என்றெல்லாம் தன்னைப் பற்றி பேசுபவர்கள் கவனத்திற்கு உண்மையான தகவல் களை முன் வைப்பதற்காக கூறி, விவாகரத்து விவரங்களை விவரிக்கிறார்.விவாகரத்துபெறும் மனைவிக்கு ரொக்கமாக, மூன்று மில்லியன் சொச்சம் பவுண்டுகளை தருவதாகவும் பிள்ளை கள் படிப்பிற்கான செலவை ஏற்பதா கவும் உறுதி அளிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளேன். அதோடு நகைகள், கார் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் வழங்கியிருக் கிறேன் என ஜீவனாம்ச விவரங்களை அனைத்தையும் பட்டியலிட்டு விடுகிறார். இவை எல்லாமே தனக்கும் தனது மாஜி மனைவிக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களாக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என நினைத்தாலும், அவதூறாக பேசியவர்களின் வாயை அடைக்க இவற்றை வெளியிட வேண்டிய தாகி விட்டது என்றும் அவர் வேதனையோடு குறிப்பிட் டுள்ளார்.இவற்றை வெளியிடுவதன் நோக்கம் மாஜி மனைவியை அவமானப் படுத்துவதல்ல என்பதையும் மிகுந்த கன்னியத்தோடு தெளிவுபடுத்தி விடுகிறார்.என்னைப்பற்றியும், நான் வழங்காத தொகைப்பற்றியும் விவாதம் செய்பவர் கள் இனி, அத்தகைய ஊகங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் வேண்டுகோளோடு இந்த விளக்கம் நிறைவடைகிறது. மொத்த விஷயங்களும் ஒரு நீண்ட பக்கத்தில் அடங்கி விடுகிறது. வேறு இணைப்புகளோ, கூடுதல் தகவல்களோ கிடையாது. இந்த தளம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும் அவர் நினைத் திருக்க வாய்ப்பில்லை. வதந்திகள் ஓயும் வரை அதற்கான விளக்கம் அளிக்கும் இடமாக மட்டுமே இருந்தால் போதும் என நினைத்து தளத்தை அந்த நோக்கத்திற்காக மட்டும் டீன் அமைத்தி ருக்கிறார். இந்த தளத்தை பார்த்த பிறகு எவருக்கும் அவரைப்பற்றி அவதூறு பேசத் தோன்ற வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு நாகரீகமாக சவுக்கடியும், சாட்டையடியும் கொடுத்து விடுகிறார் உண்மையையும் சொல்வதன் மூலம் மட்டுமே!

Thursday, November 20, 2008

எளிது எளிது, கற்பது எளிது

உலகம் நல்லாசிரியர்களால் நிரம்பி இருக்கிறது. ஏன் நீங்களே கூட ஒரு நல்லாசிரியராக இருக்கலாம். அல்லது நீங்கள் ஒரு நல்லாசிரியரை தேடிக் கொண்டிருக்கலாம்.

நீங்கள் நல்லாசிரியராக இருக் கும் பட்சத்தில் உங்களுக்கான மாணாக்கர்களை தேடிக் கொண்டி ருக்கலாம். இந்த இரண் டையுமே எளிமையாக்கித் தரும் பணியை தான் டீச்ஸ்டிரீட் டாட் காம் (tஞுச்ஞிட ண்tணூஞுஞுt.ஞிணிட்) செய்கிறது.
.
நல்லாசிரியர்களையும் நல் மாணாக்கர்களையும் சேர்த்து வைப்பதற்காக என்றே உரு வாக்கப்பட்டது தான் இந்த தளம். நல்லாசிரியர் என்றதும் சிறந்த கல்வி பணிக்கான அரசு விருதை பெற்ற பள்ளி ஆசிரியர்கள் என நினைத்துக் கொள்ள வேண்டாம்!

ஒரு குறிப்பிடட விஷயத்தை மற்றவர்களுக்கு கற்றுத்தரும் திறனும், ஆர்வமும் கொண்ட எவருமே நல்லாசிரியர் தான். அவர் பயிற்சியாளராக இருக் கலாம். தனது துறையில் நிபுணராக இருக்கலாம். ஏன் ஆசிரிய ராகவோ, பேராசிரிய ராகவோ இருக்கலாம் தனக்கு தெரிந்தவற்றை சிறந்த முறையில் கற்றுத்தர தெரிந்தவராக இருப்பவர்கள் எல்லாம் நல்லாசிரி யர்கள் தான்! இத்தகைய நல்லாசிரியர்களை தேடிக்கண்டு பிடிக்க உதவும் பணியை தான் "டீச்ஸ்டிரீட்' தளம் செய்கிறது.

கற்பது என்றவுடன் பள்ளி (அ) கல்லூரிக்கு சென்று பயில்வது மட்டும்தான் என்றில்லை. கற்பதற்கான தேவை யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். உடல் இளைப்பதற்காக யோகா கற்க விரும்பலாம். மன அமைதியை பெறுவற்காக தியானம் கற்க விரும்பலாம். சொந்தமாக இணையதளம் அமைக்க விரும்பி, எச்டிஎம்எல் கற்றுக்கொள்ள நினைக்கலாம்.

கற்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. எத்தனையோ தேவைகள் இருக் கின்றன. இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக என்று எத்தனையோ பயிற்சி முகாம் களும், வகுப்புகளும் நடத்தப் படுகின்றன.

ஆனால் பல நேரங்களில் ஒருவர் தெரிந்து கொள்ள விரும்பும் விஷயத்தை கற்றுத்தரக்கூடிய பயிற்சியாளரை தேடி பிடிப்பது இயலாத காரியமாகி விடுகிறது.

நாளிதழ் வரி விளம்பரங்களிலும், தெருவோர விளம்பர பலகைகளிலும் இந்த தகவல்களை தெரிந்து கொள்ள லாம்தான்! ஆனாலும் கூட சில நேரங்களில் தேடில் பலனளிப் பதில்லை. அதிலும் குறிப்பாக அதிகம் பரவலாகாத விஷயத்தை கற்றுக்கொள்ள விரும்பும்போது அதனை சொல்லித்தரக்கூடிய நபர்களை அறிந்து கொள்வது கஷ்டமாக இருக்கலாம். நண்பர்களை கேட்கலாம். நாமே அலைந்து பார்க்கலாம். ஆனால் நம் வீட்டு அருகாமையிலேயே நாம் கற்க விரும்பும் கலையில் தேர்ச்சி மிக்கவர்கள் இருக்கலாம் அது நமக்கு தெரியாமலே இருக்கலாம்.

இந்த இடைவெளியை போக்கும் வகையில் இரு தரப்பின ருக்கும் ஒரு பாலம் இருந்தால் எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கான பதில்தான் டீச்ஸ்டிரீட் இணையதளம்.
கற்பிப்பவர்களையும் கற்க விரும்புகிறவர்களையும்ஒன்று சேர்த்து வைக்கும். பணியை செய்வதே இந்த தளத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.

இந்த தளத்தில் நுழைந்ததுமே, என்ன கற்க விரும்புகிறீர்கள்? எங்க கற்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வி தான் வரவேற்கிறது. இரண்டு கேள்விக்கும் பதில் அளித்து விட்டு "தேடு' என கட்டளையிட்டால், அதற்கான பதில் திரையில் அழகாக வந்து நிற்கும்.

யோகா கற்க விரும்பினாலும் சரி, கம்ப்யூட்டர் கற்க விரும் பினாலும் சரி, அதனை குறிப் பிட்டு யார் எந்த அமைப்பு கற்றுத் தருகிறது என்பதை சுலபமாக தெரிந்துகொண்டு விடலாம்.

எந்த எந்த விஷயத்தை யார் எல்லாம் கற்றுத் தருகிறார்கள் என்ற விவரமும் நேர்த்தியாக பட்டியலிடப்படுகிறது. மாணவர் களாக விரும்பும் எவ ருக்கும் இந்த வசதி பேருதவியாக இருக்கும்.

அதே நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் திறமையை பறைசாற்றிக்கொள் வதற்கான வழியாகவும் இந்த தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக அவர்கள் தங்களைப்பற்றிய விவரங்களை சமர்ப்பித்து அறிமுகம் செய்து கொள்வதற்கான வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வலைப்பின்னல் தளங்களில் நமக்கான பக்கத்தை அமைத்துக் கொள்வது போலவே இந்த தளத்தில் ஆசிரியர்கள் தங்களுக் கான பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.

கற்பதற்கு ஆர்வம் உள்ளவர்கள் தேடும் போது இவ்வாறு பதிவு செய்து கொண்டவர்களின் அறிமுகமும் பட்டியலிடப்படும். மேலும் பல மாணவர்களை தேடிக்கொள்ள ஆசிரியர்களுக்கு இது சுலபமான வழி என்கிறது "டீச்ஸ்டிரிட்' அதேபோல மாணவர்களும் அதாவது கற்க விரும்புகிறவர்களும் தங்களுக் கான ஆசானை சுலபமாக தேடிக்கொண்டு விடலாம்.

புதிதாக எதையும் தெரிந்து கொள்ள மாட்டேன் என்னும் பிடிவாதம் கொண்டவர்கள் கூட இந்த தளத்தில் உலா வந்தார்கள் என்றால் இதில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை பார்த்து எதையாவது கற்றுக்கொள்ள விரும்புவார்கள். அந்த அளவுக்கு தளம் கற்பதற்கான வாய்ப்புகளை கொண்டிருக்கிறது.

ஒரே இடத்தில் கற்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டிருப்பதோடு, அவற்றை தேடுவதற்கான சுலப மான வழியையும் இந்த தளம் வழங்குகிறது. வகுப்புகளை தேடுங்கள், ஆசிரியரை தேடுங் கள் என்னும் பிரிவின் கீழ் வெகு சுலபமாக தேடி விட முடிகிறது.

Wednesday, November 19, 2008

உங்களுக்கு ஒரு கார்ட்டூன்

செல்போனின் எம்.எம்.எஸ். வசதியை நடிகைகளின் ஆபாச படங்கள் மற்றும் அனுமதியின்றி எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களோடு மட்டுமே சம்பந்தப் படுத்தி பார்க்கத் தோன்றினால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள். செல்போன் மூலம் பரவும் ஆபாச வீடியோ கிளிப்களால் நமது கலாச்சாரம் சீரழிவதாக கவலைப் பட்டு கொண்டிருந்தாலும் அதனை விட்டு விடுங்கள்.
.
காரணம் செல்போனின் எம்எம்எஸ் வசதி வேறு பல அற்புதமான வழிகளிலும் பயன்பட்டு வருகிறது. புதிய வழிகளையும் தேடிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் கார்ட்டூன்களையும், காமிக் கதைப் புத்தகங்களையும் உங்கள் செல்போனை தேடி வர செய்திருக்கிறது.

உண்மையிலேயே நகைச்சுவை பிரியர்களுக்கு இது நல்ல செய்திதான். டிஜிட்டல் யுகத்தில் கார்ட்டூன் மற்றும் காமிக் கதைகளை செல்போனிலேயே படித்து ரசிக்கக் கூடிய வாய்ப்பை மகத்தானது என்று சொல்ல வேண்டும்.

பிரிட்டனில் உள்ள பிரபல காமிக் புத்தக தயாரிப்பாளர்கள் செல்போன் சேவை நிறுவனங்களோடு இணைந்து இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளனர். பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகள், காமிக் புத்தக தேசமாக திகழ்வதாக வைத்துக் கொள்ளலாம். அந்நாட்டு நாளிதழ்களில் செய்தி களுக்கு இணையாக காமிக் கதை தொடர்கள் மற்றும் கார்ட்டூன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

நாளிதழ்களில் வெளியான பல காமிக் பாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கின்றன. "டென்னிஸ் தி மெனஸ்' போன்ற காமிக் பாத்திரங்கள் ஏறக்குறைய அழியா இடத்தை பெற்றிருக்கின்றன.

இத்தகைய காமிக் சித்திரங்களைத் தான் இப்போது செல்போனில் படிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்திருக்கின்றனர். நாளிதழ்களில் தினந்தோறும் வரும் காமிக் தொடர் களை வரிசையாக்கி ஒவ்வொரு சித்திரமாக செல்போன் வழியே அனுப்பி வைக்க தொடங்கியுள்ளனர்.

மல்டி மீடியா மெசேஜிங் என்று சொல்லப்படும் எம்எம்எஸ் வசதி வழியே இந்த காமிக் சித்திரங்கள் வந்து சேர்கின்றன. புகைப்பட எஸ்எம்எஸ் செய்தியை படிப்பது போலவே இந்த சித்திரங் களையும் படித்து மகிழலாம்.

பிரிட்டன் உள்ளிட்ட நாளிதழ்களில் காமிக் சித்திரங்களுக்கான முக்கியத்துவம் குறைந்து வரும் காலகட்டத்தில், அவற்றின் செல்வாக்கை மீட்டெடுக்கும் வழியாக இது கருதப்படுகிறது. நாளிதழ்களை விட செல்போன் மூலம் காமிக் சித்திரங்களை வினியோகிப்பது செலவு குறைந்ததாகவும் கருதப்படுகிறது.

அதே நேரத்தில் காமிக் சித்திரங் களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சியாகவும் போற்றப் படுகிறது. இளைய தலைமுறையினர் செல்போனில் செய்திகளை படிக்கும் பழக்கத்தை இயல்பாக பெற்றிருப்பதால் அவர்களை சென்றடையும் நோக்கத்தோடு இந்த வசதி அறிமுகமாகி இருக்கிறது.

இந்த வசதியை மேலும் சுவையானதாக ஆக்கும் வகையில், காமிக் சித்திரங்களில் தோன்றும் உணர்வுகளுக்கு ஏற்ப ஒலி நயத்தையும் இணைத்து வழங்க தொடங்கி உள்ளனர்.
உதாரணமாக காமிக் பாத்திரம் உதைப்பதாகவோ, அல்லது உதை வாங்குவதாகவோ வரும்போது அதற்கு உண்டான ஒலி எழுப்பப்படும்.

செல்போன் வழியே தகவல்களை காசு கொடுத்து பெற்று படிக்க பலர் தயாராக இருப்பதால் இந்த சேவைக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நம்பிக்கையோடு மறக்கப் பட்டு விட்ட பல காமிக் கதைகளை தூசுத் தட்டி டிஜிட்டல் மயமாக்க முற்பட்டுள்ளனர். செல்போன்கள் மட்டுமல்லாமல் ஐபாடு போன்ற டிஜிட்டல் சாதனங்களையும் மனதில் வைத்துக் கொண்டு இந்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஜப்பானில் அந்நாட்டுக்கு உரிய பாரம்பரிய அனிமேஷன் கலையான மங்கா டிஜிட்டல்மயமாகி பெரும் வெற்றி பெற்றிருப்பதை தங்களுக் கான உத்வேகமாக மற்றவர்கள் எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

காமிக் புத்தகங்கள் மட்டுமல்லாமல் கார்ட்டூன்களையும் இப்படி செல்போன் வழியே அனுப்பி வைக்க முடியும். காமிக் கதைகளை படிக்கும் வழக்கம் வேகமாக தேய்ந்து வருவ தாக சொல்லப்படும் நிலையில், பழைய காமிக் புத்தகங்களுக்கு எல்லாம் புதுவாழ்வு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

காமிக் கதைகள் பொதுவாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை மையமாக வைத்து செல்போனில் அனுப்பி வைக்கப்படுகின்றன என்றாலும், நகைச்சுவை உணர்வு கொண்ட சகல தரப்பினரையும் இது கவரும் என்றே கருதப்படுகிறது.

திருமணத்துக்கான சாப்ட்வேர்

திரைப்பட விழாவுக்காக என்று உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் பற்றி அறியும்போது திருமணத்துக்காகவும் ஒரு சாப்ட்வேர் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை விரிகிறது. தமிழர்களின் எதிர்காலத் தேவையில் திருமணத்துக்கான சாப்ட்வேரையும் நிச்சயம் சேர்த்துக்கொள்ளலாம்.
.
திருமண ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளும் சாப்ட்வேரை உருவாக்கக் கூடிய தனி நபர் அல்லது குழு டாட் காம் கோடீஸ்வரராக உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.
இத்தகைய சாப்ட்வேருக்கான சமூக தேவையும் இருக்கிறது. கல்யாணம் செய்து பார், வீட்டை கட்டிப்பார் என்று நம் முன்னோர்கள் சொன்னதிலிருந்து திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்வதில் உள்ள சிரமங்களை எளிதாக புரிந்துகொள்ளலாம்.

திருமண வேலைகளை இழுத்து போட்டுக்கொண்டு உற்றார்களும், உறவினர்களும் செய்து முடித்த காலம் ஒன்று உண்டு. இப்போது அத்தகைய நபர்கள் அருகி வருவதால், திருமண வேலைகளை ஒப்பந்ததாரர்களிடம் விட்டு விட்டு சாவகாசமாக இருக்கின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக இந்த பொறுப்புகள் அனைத்தையும் சாப்ட் வேரிடம் விட்டு விட்டு கவலையின்றி இருக்கலாம். எப்படி என்று புரிந்து கொள்ள டேட்டா கால் பக்கம் போவோம்.
டேட்டா கால் திரைப்பட விழாக் களை நிர்வகிப்பதற்காக என்றே உரு வாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர். செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் நிபுணரான பவல் கலேண்டா இதனை உருவாக்கியுள்ளார்.

கலெண்டா சுவாரசியமான பின்னணி யைக் கொண்டவர். இவர் துவக்கத்தில் ராணுவத்தில் பணியாற்றினார். ராணுவத்திலிருக்கும்போதுதான் சாப்ட்வேரை உருவாக்குவதில் ஈடுபட்டார்.
ராணுவ பயிற்சி முகாமுக்கான கட்டளைகளை நிறைவேற்றி தருவதற்காக சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கினார்.

அதன்பிறகு தற்செயலாக திரைப்பட விழாவை நடத்தும் பொறுப்பேற்றி ருந்த நண்பர் ஒருவரை இவர் சந்திக்க நேர்ந்தது. செக் குடியரசு நாட்டின் பிரசித்தி பெற்ற திரைப்பட விழாவுக்கு பொறுப்பேற்றிருந்த அந்த நண்பர், விழா நிர்வாகம் தொடர்பாக விழி பிதுங்கி நின்றபோது கலேண்டா, தற்காலிகமாக விழாவுக்கான அனைத்து வேலைகளையும் பொறு ப்பேற்று நிறைவேற்றக்கூடிய சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கினார்.

வியப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில், ராணுவ பின்னணி அவருக்கு சாப்ட்வேர் உருவாக்கத்தில் கை கொடுத்தது. ராணுவத்தில் இருக்கக் கூடிய கட்டுப்பாடும், ஒழுங்கும் திரைப்பட விழாவுக்கான பணிகளை ஒருங்கிணைக்கும் சாப்ட் வேரை வடிவமைப்பதில் கை கொடுத்தது.

பின்னர் முழு அளவில் இந்த சாப்ட்வேரை உருவாக்கினார். டேட்டா கால் என்னும் பெயரில் உருவாக்கப் பட்ட அந்த சாப்ட்வேர் 2000மாவது ஆண்டு முதல் முறையாக செக் குடியரசு நாட்டை விட்டு வெளியே வந்தது.

நார்வே நாட்டில் நடைபெற்ற திரைப் பட விழாவுக்கு இந்த சாப்ட்வேரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நிறைவேற்றினர். அதன்பிறகு இந்த சாப்ட்வேர் தொடர்ந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

இன்று இந்த சாப்ட்வேரை பயன் படுத்தாத முன்னணி பட விழாக்களே இல்லை என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு ஏன், விரைவில் நடை பெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தப்படவுள்ளது.
திரைப்பட விழாவை நடத்துவதில் உள்ள நிர்வாக சிக்கல்களை எளிதாக கற்பனை செய்து கொள்ளலாம். நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் திரையிடப்படும் நிலையில், அவற்றின் படைப்பாளிகளை வரவேற்று சிறப்பு விருந்தினர்களை எதிர்கொண்டு ரசிகர்களுக்கு இடமளித்து இவ்வளவுக்கும் நடுவே பத்திரிகையாளர்களுக்கு அங்கீ காரத்தை வழங்கியாக வேண்டும். இதற்கு நிர்வாகிகள் பம்பரமாக சுற்றி சுழன்று செயல்பட வேண்டும்.
எங்கே சிறு குறை ஏற்பட்டாலும், ஒட்டுமொத்த திரைப்பட விழாவின் தன்மையும் பாழாகிவிடும்.

அவ்வாறு ஏற்படாமல் இந்த சாப்ட்வேர் மிக அழகாக நிகழ்ச்சிகளை நிர்வகிக்கிறது. விருந்தினர்களுக்கான வரவேற்பு அட்டைகளை வழங்கி அவர்களுக்குரிய ஓட்டல் அறையை ஒதுக்குவதில் தொடங்கி ரசிகர் களுக்கான டிக்கெட்டுகளை வினி யோகம் செய்வது வரை அனைத்தை யும் இந்த சாப்ட்வேர் பார்த்துக் கொள்கிறது. இதற்கு தேவையான தகவல்களை மட்டும் சமர்ப்பித்து விட்டால் போதும்.

இந்த சாப்ட்வேரை பயன்படுத்துவது விழா நிர்வாகிகளுக்கு ஒரு வார காலம் பயிற்சி அளிக்க வேண்டியிருக்கிறது என்றால் இது எத்தனை செயல் திறன் மிக்கதாக இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

இதேபோல, நம்மவர்கள் திருமணத்துக்காக என்று ஒரு சாப்ட்வேரை உருவாக்கினார்கள் என்றால், திருமணத்திற்கான பத்திரிகை அனுப்பி வைப்பது தொடங்கி, திருமண தினத்தன்று வந்தவர்களை வரவேற்று பந்தி உபச்சாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் வரை அனைத்தையும் இந்த சாப்ட்வேர் பார்த்துக்கொள்ளும்.

அக்கம் பக்கத்துக்கு ஒரு தராசு

எல்லோரும் இன்முகத்துடன் இருக் கின்றனர். பக்கத்து வீட்டுக்காரர்களோடு எந்த பிரச்சனையும் இல்லை. சுற்றுப்புற பகுதி சொர்கம் போல இருக்கிறது.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்றும் அச்சத்தில் ஒவ்வொருவரும் நல்ல விதமாக நடந்து கொள்கின்றனர்.
.
இப்படி ஒரு "கனவு ஊர்' எங்கே இருக்கிறது என்பது ஏக்கத்துடன் நீங்கள் கேட்டால், அதற்கான பதில் உங்களை ஏமாற்றத்திலேயே ஆழ்த்தும். காரணம், இத்தகைய ஊர் எங்கேயும் கிடையாது. எல்லா ஊரிலும் பிரச்சனைகள் இருக்கிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சுய நலம் மிக்கவர்களாக இருக்கின்றனர்.

நள்ளிரவில் பாட்டு கேட்டு தூங்க விடாமல் செய்கின்றனர். சற்றும் கவலையின்றி உங்கள் வீட்டுப் பக்கம் குப்பை கொட்டுகின்றனர். சாக்கடை நீரை தெருவில் ஓட விடுகின்றனர். இவற்றை சுட்டிக் காட்டினால், "உன் வேலையை பார்த்துக் கொண்டு போ' என்பது சட்டம் பேசுகின்றனர். நீங்களும் சளைத்தவரில்லை. "உன்னை விட்டேனா பார்' என்று சவால் விட்டு சண்டைக்கு போகிறீர்கள்.

இனி, நீங்கள் சண்டைக்குச் செல்ல வேண்டாம்! அதற்காக பக்கத்து வீட்டுக்காரரின் அநியாயங்களை பொறுத்துக் கொண்டு புலம்பவும் வேண்டியதில்லை. நாலு வார்த்தை எழுதி வைத்தால் போதுமானது! இதற்காக என்றே, ஒரு இணைய தளம் இருக்கிறது. ராட்டன் நைபர் ( கீணிttஞுண Nஞுடிஞ்டஞணிணூ) என்பது அதன் முகவரி. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை பதிவு செய்து வைப்பதற்காக என்றே இந்த தளம் நடத்தப்படுகிறது. எனவே, பக்கத்து வீட்டுக்காரரின் முரட்டுத் தனத்தையும் இதில் பதிவு செய்யலாம்.

அதே நேரத்தில் புதிய ஊருக்கு குடி போகிறீர்கள் என்றால் அங்குள்ளவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதையும் இந்த தளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

சொந்தமாக வீடு வாங்குபவர்கள், (அ) வாடகைக்கு செல்பவர் களுக்கான தேடியந்திரமாக இந்த தளம் உருவாக்கப் பட்டுள்ளது.

அதிலும் எப்படி, அழகாக கூடுதல் வரைப்படத்தில் குறிப்பிட்ட இடத்தை பெரியதாக்கிப் பார்த்து, அங்கு நீங்கள் பார்த்திருக்கும் வீட்டிற்கு அருகாமையில் இருப்பவர்கள் எப்படி என்பதை தெரிந்து கொள்ள முடியும். இவை எல்லாமே அருகாமையில் வசிப்பவர்கள் பதிவு செய்தவை.

இந்த தளத்தில், நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ளவர்களை பற்றி அவர்கள் குணாதிசயத்தை பதிவு செய்யலாம். (அ) நீங்கள் விரும்பும் பகுதியில் பலர், யார் எப்படி என தெரிந்து கொள்ளலாம். இரண்டுமே மிகவும் சுலபமானவை. குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து, அதற்கான கூடுதல் வரைபடத்தில், வீட்டை சுட்டிக்காட்டி அதன் உரிமையாளர் பற்றிய கருத்துக்களை தெரிவிக்கலாம்.

மிகச் சிறந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் கொண்ட பகுதியை கண்டுபிடிக்க, உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் பற்றிய கருத்துக்களை தெரிவித்து மதிப்பீட்டு உதவுங்கள் என்று இந்த தளத்தின் முகப்பு பக்கம் அழைப்பு விடுக்கிறது.

மோசமான அணுகுமுறையை தான் எழுத வேண்டும் என்றில்லை. நல்ல விதமாக நடந்து கொள்பவர்கள் பற்றியும் எழுதலாம். அதே நேரத்தில் உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும், இந்த தளத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

இப்போது சொல்லுங்கள். இந்த தளத்தில் எழுதி விடப்போகிறார்கள் என்ற அச்சத்தில் மோசமாக நடந்து கொள்வதை பலர் தவிர்க்கலாம் அல்லவா? அப்படியும் சொல்வதற் கில்லை. பலர் வேண்டுமென்றே அவதூறிலும் ஈடுபடலாம். இதனால் வீண் பிரச்சனைகளும், மன உளைச்சலும் மட்டுமே மிச்சமாகலாம்.

எது நடக்கிறது, தளம் எப்படி உருவாகிறது என்பது போக போகத்தான் தெரியும்.
இப்போதைக்கு இந்த தளத்தை இன்டர்நெட்டின் ஆற்றலை பயன் படுத்திக் கொண்டு சுற்றுப்புறத்தை சீர்தூக்கிப் பார்ப்பதற்கான வழி என்று மட்டும் குறிப்பிடலாம்.

ஏற்கனவே, "ஜில்வோ டாட்காம்' சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகளின் மதிப்பை தெரிந்து கொள்வதற்கான சேவையை வழங்கி வருகிறது. அதைப் போலவே, சுற்றுப்புறம், மன நிம்மதி தரக்கூடியதாக அமையுமா என்பதை கணக்கிட இந்த தளம் உதவுகிறது.

"ஜில்வோ டாட்காம்' பிரதானமாக அமெரிக்காவுக்கானது. "ராட்டன் நைபர்' தளம் அகில உலகிற்கானது என்கின்றனர். இதனை உருவாக்கியுள்ள பிரான்ட் வால்கர் அமெரிக்காவின் கண்டியாகோ எதிரில் வசிக்கும் 27வயதான வால்கர் விவகாரமான இணைய தளங்கள் அமைப்பதே வழக்கமாக கொண் டிருப்பவர். இதற்கு முன்னர் அமெரிக் காவில் வீடு இல்லாதவர்களை அடை யாளம் காட்டும் "பம்பைண்டர்' டாட் காம் என்று தளத்தையும் அதன் பிறகு மைஸ்பேஸ் தளத்திற்கான பொய்யான நண்பர்கள் உருவாக்கித் தரும் "பேக்ஸ் ஸ்பேஸ்' டாட்கம் தளத்தையும் நடந்தி யவர். இரண்டு தளங்களுமே மிகுந்த சர்ச்சைக்கு ஆளாயின.

தற்போது அவர் துவங்கியுள்ள தளம் இந்த அளவுக்கு விவகாரமானது இல்லை என்றாலும், இது, நம்மை நல்லவர்களாக மாற்றும் தன்மை கொண்டது. (அ) குறைந்தபட்சம் நல்லவர்களாக அடை யாளம் காட்ட உள்ளது.

மைஸ்பேஸ் இருக்க பயமேன்

வலைப்பின்னல் தளங்களின் விபரீத விளைவுகள் பற்றி என்னன்னவோ சொல்கிறார்கள். இந்த தளங்கள் எல்லாம் ஆபத்தின் மறுவடிவம் என்பது போல, இவற்றால் ஏற்படும் தீமைகளும், பாதிப்புகளும் பெரிதாக பேசப்படுகிறது. இவற்றுக்கு நடுவே, வலைப்பின்னல் தளங்களின் ஆதார பலத்தையும் மறந்துவிடக்கூடாது. இந்த பக்க விளைவுகள் எல்லாம் அலட்சியப்படுத்தக் கூடிய அங்கொன்றும், இங்கொன்றுமான நிகழ்வே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

.
இந்த கருத்தை உறுதிப்படுத்திக் கொள்ள விவாதத்தில் ஈடுபடாமல், வலைப் பின்னல் தளங்களினால் உண்டாகக் கூடிய நல்ல பயன்களுக்கான அழகான உதாரணம் ஒன்றை பார்ப்போம்.

அது, மைஸ்பேஸ் திறந்து விட்டிருக்கும் கூடுதல் கதவுகள் பற்றிய கதையாக விரிகிறது. இளைஞர்களின் இணைய கூடாரம் என்று வர்ணிக்கப்படும் "மைஸ்பேஸ்' வலைப்பின்னல் தளங்களின் பிரதிநிதியாக அறியப்படுகிறது. இந்த தளத்தின் மூலம் அதன் உறுப்பினர்கள் இமெயிலில் தொடங்கி, செய்திகள், கருத்துக்கள் என சகலத்தையும் பரிமாறிக் கொள்கின்றனர்.

மைஸ்பேஸ் மூலம் எளிதாக நண்பர்களை தேடிக்கொள்ளலாம். தவிர, மைஸ்பேஸ் வழியே வீடியோ கோப்புகளையும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இரண்டையும் இணைத்தால், உங்களுக்கான பிரத்யேக ரசிகர்கள் கிடைத்து விட மாட்டார்கள். அதாவது நீங்கள் துடிப்பும், படைப்பாற்றல் மிக்க கலைஞராகவும் இருந்து, உங்கள் படைப்பை, ரசிக்கக் கூடியவர்களை (நீங்களே) தேடிக் கொள்ளும் ஆர்வமும் இருந்தது என்றால்!

அமெரிக்காவைச் சேர்ந்த மார்ஷல் ஹெர்கோவிம்ப் மற்றும் எட்வர்டு விக் ஆகியோர் இதைதான் செய்திருக்கின்றனர். இருவரும் சேர்ந்து இயக்கியுள்ள தொலைக்காட்சி தொடரை "மைஸ்பேஸ்' தளத்தில் வெளியிட்டிருக்கின்றனர். மைஸ்பேஸ் தளத்தில் வீடியோ கோப்புகளை பதிவேற்ற முடியும் என்னும் போது, தொலைக்காட்சி தொடரின் நிகழ்ச்சிகளையும் ஒவ்வொன்றாக இந்த தளத்தின் மூலமே ஒளிபரப்பலாம் தானே!
ஆக, இந்த தொடரை பார்க்க எந்த சேனலின் தயவும், தேவை இல்லை. மைஸ்பேஸ் தளத்தில் இதற்கென துவக்கப்பட்டுள்ள பக்கத்திற்கு போனால் பார்த்து ரசிக்கலாம். மைஸ்பேஸ் இலக்கணப்படி உறுப்பினர்கள் இதை பார்த்து ரசித்த கையோடு, மற்ற உறுப்பினர்களோடு நிகழ்ச்சி பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். இப்படி பகிர்ந்து கொள்வதன் மூலம் புதிய நண்பர்களையும் தேடிக் கொள்ளலாம். தொடர்பு சங்கிலி பெரிதாக, பெரிதாக நண்பர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, நிகழ்ச்சிக்கான புதிய ரசிகர்கள் கிடைக்கப் பெற்று, எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகும். இந்த நம்பிக்கையில்தான் ஹெர்கோவிம்ப் மற்றும் விக் ஆகிய இருவரும் எந்த சேனலையும் சார்ந்திருக்காமல் நேரிடையாக மைஸ்பேஸ் தளத்தில் தங்கள் படைப்பை இடம் பெற வைத்திருக்கின்றனர்.

உண்மையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுடன் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இவர்கள் மைஸ்பேசிடம் வந்திருக்கின்றனர். கால் வாழ்க்கை என்னும் பெயரில் ஏபிசி தொலைக்காட்சிக்காக இவர்கள் நிகழ்ச்சியின் சில பகுதியை தயாரித்துக் கொடுத்தனர். ஆனால் தொலைக்காட்சி நிர்வாகம் கதைக் கருவில் கைவைத்து, படைப்பாளி என்ற முறையில் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை ஆலோசனைகள் என்னும் பெயரில் முன்வைத்ததால் இருவரும் வெறுப்புற்று வெளியே வந்து விட்டனர்.

அதன் பிறகு இந்த நிகழ்ச்சியை முழுத்தொடராக உருவாக்கி, "கால் வாழ்க்கை' என்னும் பெயரில் மைஸ்பேஸ் தளத்தில் வெள்ளோட்டம் விட்டிருக்கின்றனர். நிகழ்ச்சியை மைஸ்பேஸ் உறுப்பினர்கள் வீடியோ கோப்பாக பார்க்க முடியும் என்பதோடு, அவர்களின் கூடுதல் கவனத்தையும், ஆர்வத்தையும் ஈர்க்கும் வகையில், நிகழ்ச்சிக்கான பக்கத்தில் அதன் கதாபாத்திரங்கள் மற்றும் கதைப்போக்கு பற்றிய விவரங்களும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
கதாபாத்திரங்கள் பேசுவது போன்ற இந்த தகவல்கள், நிகழ்ச்சி மீது பற்று கொண்ட ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி மைஸ்பேஸ் தனித்தன்மையை பயன்படுத்திக் கொள்வதோடு, இதே பாணியில் இந்த நிகழ்ச்சிக்காக என்றே தனியே ஒரு வலைப்பின்னல் தளமும் (quaterlife.com) என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.
படைப்பாற்றல் பாதிக்கப்படாமல், கலைஞனுக்குரிய முழு சுதந்திரத்தோடு, நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிட இது சிறந்த வழி என்று கருதப்படுகிறது.

ஊர் சுற்றுவோம்! உழைப்போம்!

நீங்கள் ஒரு டாக்டர் என்று வைத்துக்கொள்வோம். வெளியூருக்கோ, வெளிநாட்டிற்கோ சுற்றுலா செல்கிறீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம். அங்கே ஓய்வு கிடைக்கும் போது, ஒரு சில நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?
டாக்டராகதான் இருக்க வேண்டும் என்றில்லை. எந்த துறையில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் உங்களுக்கென ஒரு நிபுணத்துவமும், தனி அனுபவமும் இருக்கத்தானே செய்யும்.

.
வெளியூர் சுற்றுலா செல்லும்“ போது, நடுவே அந்த அனுபவத்தை பயன்படுத்திக்கொண்டு வேலை வாய்ப்பு தேடி வரும் சாத்தியம் உண்டுதானே! அதனை பயன்படுத்திக்கொண்டால் நல்லதுதானே. 

ஆனால், சுற்றுலாவின் நோக்கமே ஓய்வு எடுப்பது தானே, அங்கேயும் போய் வேலை செய்ய வேண்டுமா, என அலுத்துக் கொள்பவர்கள் கவனிக்க,இத்தகைய வேலை வாய்ப்பை தேடித் தருவதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது தெரியுமா?

அதாவது, ஊர்சுற்றிப் பார்க்க வருபவர்ளுக்கு உள்ளூரில் உள்ள தற்காலிக வேலை வாய்ப்புகளை அறிமுகம் செய்து வைக்கிறது இந்த தளம்.  சுற்றுலா போன இடத்தில் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் உங்களுக்கு உகந்ததாக தோன்றாதுதான். காரணம் நீங்கள் சுற்றுலா பயணிகளாக இருக்க விரும்புகிறீர்களே தவிர, புதிய ஊர்களில், புதிய அனுபவத்தை நாடும் ஊர்சுற்றியாக இருக்க விரும்பவில்லை என்பதே விஷயம்!

ஆம், சுற்றுலா பயணிகளுக்கும், ஊர் சுற்றிகளுக்கும் முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் சுற்றுலா செல்லலாம். ஆனால், எல்லோராலும் ஊர்ச் சுற்றிகளாக இருக்க முடியாது. அதற்கென ஒரு தனி மனநிலை தேவை.
இவர்களுக்கு என்று தனி பெயரும் இருக்கிறது. - பேக்பேக்கர்ஸ்!

இவர்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கா விட்டாலும் கூட,நேரில் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. மூட்டை போன்ற ஒரு பெரிய பையை முதுகில் சுமந்தபடி சுற்றித்திரியும் வெளிநாட்டவரை நீங்கள் அவ்வப்போது பார்த்து இருக்கிறீர்கள் அல்லவா? அவர்களுக்குத்தான் பேக் போக்கர்ஸ் என்று பெயர். தமிழில் ஊர் சுற்றிகள் என்று வைத்துக்கொள்வோமே! 

இவர்கள் சராசரி சுற்றுலா பயணிகள் அல்ல. பொதுவாக சுற்றுலா செல்வது என்றால், அதுவும் வெளிநாடுகளுக்கு செல்வது என்றால் என்ன செய்வோம்? புறப்படுவது முதல், தங்குவது, சுற்றிப்பார்ப்பது, திரும்பி வருவது என அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு கொள்வோம் அல்லவா? இப்படி திட்டமிட்டுக் கொண்டாலும், எல்லாம் சரியாக இருக்குமா என்ற சந்தேகமும், கவலையும் இருக்கும். 

இதற்கு மாறாக, எதையும் திட்டமிடாமல் நினைத்த ஊருக்கு கிளம்பி வந்து விடுபர்வகள்தான் ஊர்ச்சுற்றிகள். தங்குமிடம், உணவு, பார்க்குமிடம் என எதைப்பற்றிய கவலையும் அவர்களிடம் இருக்காது. பயணத்திற்கு என எவ்வித தனிப்பட்ட ஆயத்தங்களையும் அவர்கள் மேற்கொள்வதில்லை. 

அவர்களைப் பொருத்தவரை, முதுகின் பின்னே உள்ள மூட்டைப்பைதான் சகலமும். உணவு, தண்ணீர், உடைகள் என  எல்லாமும் அதில் அடங்கிவிடும். எனவே, அவர்கள் தங்குவதற்கான ஓட்டல் பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல், கிடைக்கும் இடத்தில் கட்டையை சாய்த்து விடுவார்கள். 

அது சாலையோர பூங்காவாகக் கூட இருக்கலாம். சமயங்களில் தாங்கள் சந்தித்து பேசும் உள்ளூர் நபரின் வீட்டிலேயே கூட தங்கி விடுவதுண்டு. புதிய அனுபவத்தை பெறுவதையே முக்கியமாக கருதுவதால், இவ்வாறு நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கி கொள்ளாமல் நினைத்தபடி ஊர் சுற்றுவது பொறுத்தமாக இருக்கிறது. 

இத்தகைய ஊர்ச்சுற்றிகளின் பட்ஜெட் குறைவாகவே இருக்கும் என்பதோடு வந்த இடத்தில் கொஞ்சம் காசு கிடைத்தால் கூட நன்றாக இருக்கும் என்றுதான் நினைப்பார்கள். அதாவது ஊர் சுற்றிப்பார்பதற்கு நடுவே, ஏதாவது வேலை பார்க்க முடிந்தால், மனமுவந்து அதற்கு உடன்படுவார்கள். 

அதே நேரத்தில் உள்ளூரில் உள்ள நிறுவனங்களும் தற்காலிக வேலைகளுக்காக ஊர்சுற்றிகளை பயன்படுத்திக்கொள்ள விருப்பப்படும். காரணம் ஊர்ச்சுற்றிகள், தங்களது துறையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களது திறமைய பயன்படுத்திக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். 

உதாரணத்திற்கு ஹாலந்தில் இருந்து வரும் ஊர்ச்சுற்றி ஒருவர் இணையதள வடிவமைப்பில் கில்லாடி என்று வைத்துக்கொள்வோம். உள்ளூரில் உள்ள சிறிய நிறுவனம் ஒன்று தனது இணைய தளத்தை மாற்றி அமைக்க விரும்பலாம். 

இதற்கு நிபுணர்களை அமர்த்தினால் செலவு அதிகமாகலாம். அதைவிட ஹாலாந்துக்காரரை அழைத்துப் பேசினால் இணையதளத்தை அதற்காக வடிவமைத்து கொடுத்து விடுவார். 
நியாயமான கட்டணத்தை கொடுத்தால் சந்தோஷமாக வாங்கி கொள்வார். அவரைப் பொறுத்தவரை அந்த இடத்தில் சில டாலர்கள் கிடைத்த மகிழ்ச்சி. உள்ளூர் நிறுவனத்திற்கோ குறைந்த செலவில் வேலை முடிந்த திருப்தி. 

இப்படி எந்த நிறுவனமும் உள்ளூருக்கு வரும் ஊர்ச்சுற்றிகளின் திறமைகளை பயன்படுத்திக்கொண்டு பரஸ்பரம் பயன் பெறலாம். எல்லாம் சரி, வரும் ஊர்ச்சுற்றிகளில் யாருக்கு என்ன திறமை இருக்கிறது என்பதோ அல்லது அவர்கள் தனது சேவையை வழங்க தயாராக இருப்பதையோ தெரிந்து கொள்வது எப்படி? அதே போல் ஊர்ச்சுற்றிகள் நிறுவனங்களின்  தேவையை தெரிந்து கொள்வது எப்படி சாத்தியம்?

இந்த கேள்விகளுக்கு பதிலாக பிறந்ததுதான் பேக்போக்கர்ஸ் ஜாப் சர்ச்  டாட்காம். வேலை பார்க்க தயாராக உள்ள ஊர்ச்சுற்றிகளுக்கும் தற்காலிக வேலை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தி தரும் பாலமாக இந்த தளம் செயல்படுகிறது.

ஊர்ச்சுற்றிகள் தங்கள் பயணத்தை தொடங்கும் முன், இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது தங்கள் திறமை மற்றும் சார்ந்துள்ள துறை பற்றி குறிப்பிடவேண்டும். இதேபோல் நிறுவனங்களிடம் உள்ள வேலைகளை பட்டியலிடலாம். 

இருதரப்பினரும் பரஸ்பரம் பொறுத்தம் பார்த்து, தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம்.  ஊர்ச் சுற்றிகளுக்கு தற்காலிக வேலையும், நிறுவனங்களுக்கு பல்வேறு திறமை கொண்டவர்களின் சேவையும் கிடைக்கச் செய்வதே தனது நோக்கம் எனச் சொல்லும் இந்த தளம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மட்டுமே செயல்படக்கூடியது

பாட்காஸ்டிங் கேட்க வா

பாட்காஸ்டிங் பிரியர்களுக்கு நற்செய்தியாகவும், அதேபோல செல்போன் வைத்திருப்பவர்களுக்கும் நல்ல செய்தியாக புதியதொரு சேவை அறிமுகமாகியிருக்கிறது.பாட்காஸ்டிங் மற்றும் செல்போன் இந்த இரண்டையும் இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை கொஞ்சம் தாமதமாக அறிமுக மாகியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் பாட்காஸ்டிங் பிரபலமானபோதே இந்த சேவை அறிமுகமாகியிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் செல்போனில் பாடல்கள் கேட்பது, பிரபலமான உடனேயேனும் இந்த சேவை அறிமுகாகியிருக்க வேண்டும்.
.
யாருக்கும் தோன்றவில்லையா? என்ன என்று தெரியவில்லை. செல்போன் மூலம் பாட்காஸ்டிங்கை கேட்க வழி செய்யும் இந்த சேவை தற்போதுதான் அறிமுகமாகியிருக் கிறது. ஃபோன் ஷோ டாட்காம் என்னும் இணையதளம் இந்த சேவையை அறிமுகம் செய்திருக்கிறது.பாட்காஸ்டிங் பற்றி அறிந்தவர்க ளுக்கு இந்த சேவையின் மகத்துவம் எளிதாக புரிந்துவிடும். இன்டெர்நெட் மூலம் ஆடியோ நிகழ்ச்சிகளை தருவித்து கேட்கும் வசதி பாட்காஸ்டிங் என்று குறிப்பிடப் படுகிறது.தனி நபர்கள் வானொலி என்றும் வர்ணிக்கப்படும் பாட்காஸ்டிங் பற்றி பரபரப்பாக பேசப்பட்டாலும், இந்த பிரிவில் புதுமையான பல நிகழ்ச்சிகள் அறிமுகமானாலும், எதிர்பார்த்த அளவுக்கு பாட்காஸ்டிங் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.ஆரம்ப கால பரபரப்பு அடங்கிப்போய் பாட்காஸ்டிங் பற்றி பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தான் ஃபோன் ஷோ சேவை மீண்டும் பாட்காஸ்டிங்கை முன்னுக்கு கொண்டு வந்திருக்கிறது.ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட் காஸ்டிங் வகைகள் இருந்தாலும், அதன் நிகழ்ச்சிகளை டவுன்லோடு செய்து கேட்பதற்கான முறை என்னவோ ஒன்றுதான். பாட்காஸ்டிங் சேவை வழங்கும் தளங்களில் உறுப்பினராக பகிர்ந்துகொண்டால், அந்த ஆடியோ கோப்பை செய்தி யோடை வசதியாக டவுன்லோடு செய்து விரும்பும் நேரத்தில் கேட்கலாம். நல்ல பாட் காஸ்டிங் நிகழ்ச்சிகளை தொகுத்தளிப்ப தற்கான சிறந்த திரட்டிகளும் இருக்கின்றன.ஆனால் பாட்காஸ்டிங்கை பொதுவாக நம்முடைய கம்ப்யூட்டர் மூலம்தான் கேட்கலாம். இப்போது செல் போன்களில் எம்பி3 கோப்புகள் மூலம் பாடல்களை கேட்டு ரசிப்பது மிகவும் பரவலாகி இருக்கும் நிலையில், செல்போனிலேயே பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளை கேட்க முடிவது உண்மை யிலேயே பயனுள்ள சேவைதான்.ஃபோன் ஷோ இணையதளம் இந்த சேவையைதான் வழங்குகிறது. தங்களுடைய செல்போனில் பாட் காஸ்டிங் நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்க விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும்.பதிவு செய்து கொள்வதற்காக செல்போன் நம்பரை மட்டும் குறிப்பிட் டால் போதும் வேறு எந்த விவரங்களை யும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதன்பிறகு பாட்காஸ்டிங் நிகழ்ச்சி பற்றிய தகவல் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் எஸ்எம்எஸ் ல் குறிப்பிடப்பட்டுள்ள பாட்காஸ்டிங் நிகழ்ச்சியை கேட்க விரும்பினால் அதில் உள்ள தொலை பேசி எண்ணுக்கு டயல் செய்தால் பாட்காஸ்டிங் நிகழ்ச்சி செல்போனில் கேட்கத்தொடங்கி விடும். அதன்பிறகு செல்போனில் உள்ள பட்டன்களை அழுத்துவதன் மூலம் அடுத்த நிகழ்ச்சியை கேட்பதோ அல்லது முந்தைய நிகழ்ச்சிக்கு செல்வதோ அல்லது வேறு நிகழ்ச்சிக்கு தாவுவதோ சுலபமானது. கேட்கும் நிகழ்ச்சி பிடித்திருந்தால், நண்பர்களுக்கு அதனை பார்வர்டு செய்யலாம். பாட் காஸ்டிங் ஏற்படுத்தி தரும் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு வித விதமான நிகழ்ச்சிகளை தனி நபர்கள் பாட்காஸ்ட் செய்து வருகின்றனர்.வெறும் பாட்டு கேட்பதைவிட இத்தகைய நிகழ்ச்சிகளை செல்போன் மூலம் கேட்டு ரசிக்க முடிவது சிறப்பானதுதானே. அமெரிக்காவை சேர்ந்த எரிக் ஸ்குவாட்ஸ் மற்றும் மிக் வால்ப் ஆகிய தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த சேவையை உருவாக்கியுள்ளனர்.வீடியோ கோப்புகளை டவுன்லோடு செய்து பார்ப்பது பரவலாக உள்ள நிலையில், ஆடியோ கோப்புகளுக்கு இத்தகைய முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதை உணர்ந்து இந்த இருவரும் ஃபோன் ஷோ சேவையை உருவாக்கியதாக தெரிவிக்கின்றனர். முதல்கட்டமாக அமெரிக்காவில் உள்ள செல்போன் பயனீட்டாளர்களுக்கு இந்த சேவை அறிமுகமாகி இருக்கிறது.இதன் வெற்றியைப்பொறுத்து மற்ற நாடுகளிலும் இந்த சேவை அறிமுகம் ஆகலாம். ஃபோன் ஷோ தளத்தின் மூலம் பாட்காஸ்டிங்கை செல்போனில் டவுன்லோடு செய்து கொள்வது சுலபமானது. அது மட்டுமல்லாமல், பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளை தேடிப் பார்ப்பதும் மிகவும் சுலபமானது.பாட்காஸ்டிங் நிகழ்ச்சிகளின் வகைகளை குறிப்பிடும் பல்வேறு தலைப்புகளின் கீழ் நிகழ்ச்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை கிளிக் செய்து விருப்பமான நிகழ்ச்சி களை தேர்வு செய்து கொள்ளலாம்.அது மட்டுமல்லாமல் பாட்காஸ்டிங் செய்து வருபவர்கள் தங்களது நிகழ்ச்சிகளையும் இதில் சமர்ப்பிக்கலாம். அந்த வகையில் பாட்காஸ்டிங் தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகிய இருவருக்கு இடையே யான பாலமாகவும் இந்த தளம் செயல்படுகிறது. விளம்பரத்தின் மூலம் வருவாயை தேடிக்கொள்ளும் நம்பிக்கை இருப்ப தால் இந்த சேவையை ஃபோன் ஷோ இலவசமாகவே வழங்குகிறது.

புகார் செய்ய விரும்பு

கொஞ்சம் அசந்தால் அல்லது சிறிது கவனக்குறைவோடு இருந்தால் இன்டெர்நெட்டில் ஏமாந்து விடுவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது. மோசடி இமெயில்களில் தொடங்கி, கிரெடிட் கார்டு எண்ணை பறித்து ஏமாற்றுவது, அடையாள மோசடி என இன்டெர்நெட்டில் கணக்கற்ற ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
.
நம்பி வரும் இணையவாசிகளை அந்த நம்பிக்கையை வைத்து வலையில் விழச் செய்து விடும் கலையில் பலர் கில்லாடிகளாக இருக்கின்றனர். இத்தகைய இன்டெர்நெட் மோசடிகளின் வகைகளும் சரி, எண்ணிக்கையும் சரி அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன.விழிப்புணர்வோடு இருப்பவர்கள் எப்படியோ தப்பித்துக் கொண்டு விடுகின்றனர். ஆனால் அப்பாவிகள் வசமாக மாட்டிக் கொள்கின்றனர். இன்டெர்நெட் மோசடியில் மிகப் பெரிய சோகம் என்னவென்றால் ஏமாந்து நிற்கும் நிலையில் அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாத நிலைதான்.அதாவது ஏமாற்றப்பட்டதை யாரிடம் தெரிவிப்பது, எப்படி புகார் செய்வது போன்ற விஷயங்கள் தெளிவில்லாமல் இருப்பதால் ஏமாறுபவர்களின் நிலை மேலும் பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது.இதனால் பல குற்றங்கள் வெளிச்சத்துக்கு வராமலேயே போய் விடுகிறது. அது மட்டுமல்லாமல் இத்தகைய குற்றங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் கூட ஏற்படாமல் போய் விடுகிறது. இது இன்டெர்நெட் தொடர்பான சந்தேகத்தை மேலும் அதிகமாக்கி விடுகிறது.இதற்கு தீர்வாக பிரிட்டனில் ஒரு முன்னோடி முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்டெர்நெட்டை பயன்படுத்தும் போது ஏமாற்றப்பட்டால் அதனை புகார் செய்வதற்காக என்று ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.www.ic3.org எனும் அந்த தளத்தின் மூலம் ஏமாற்றப்படும் இணையவாசிகள் தங்கள் புகாரை பதிவு செய்யலாம். அனைத்தும் ஒரே குடையின் கீழ் கிடைக்கும் இடம் என்று சொல்லப்படுவதை போல இன்டெர்நெட் மோசடி தொடர்பான சகலவிதமான செயல்களையும் புகார் செய்யக் கூடிய ஒரே இடமாக இந்த தளம் செயல்பட்டு வருகிறது.இன்டெர்நெட்டில் எந்த வகையான மோசடிக்கு ஆளானாலும் சரி. இந்த தளத்தில் புகார் செய்தால் போதும். உரிய அதிகாரிகளுக்கு அந்த மனு அனுப்பி வைக்கப்பட்டு விடும்.எனவே எந்த துறையிடம் புகார் செய்வது, எப்படி புகார் செய்வது என்ற குழப்பத்திற்கே இடமில்லை.பிரிட்டனின் பிரதான உளவு அமைப்பான மத்திய புலனாய்வு மையம் மற்றும் தேசிய ஒயிட்காலர் குற்ற மையம் ஆகிய இரண்டு அமைப்புகள் சேர்ந்து இந்த தளத்தை உருவாக்கி உள்ளன.அதிகரித்து வரும் இன்டெர்நெட் மோசடிகள் குறித்த புகார்களை பதிவு செய்வதற்கான எளிய வழியை ஏற்படுத்தி தர வேண்டும் என்னும் நோக்கத்தோடு இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2000மாவது ஆண்டிலேயே இந்த தளம் ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு இன்டெர்நெட் குற்றங்களின் வகைகள் அதிகரித்து விட்டன. அதே போல இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்ட புகார்களும் பலவிதத்தில் சேர்ந்தவையாக இருந்தன.ஆரம்பத்தில் இந்த தளம் இன்டெர்நெட் பிராடு சென்டர் எனும் பெயரில்தான் செயல்பட்டு வந்தது. ஆனால் இன்டெர்நெட் தொடர்பான அனைத்து வகையான மோசடிகள் குறித்த புகார்களும் இதில் தெரிவிக்கப்பட்டதால், இதன் பரப்பை உணர்த்தக் கூடிய வகையில் இதன் பெயர் இன்டெர்நெட் கிரைம் சென்டராக மாற்றப்பட்டது.கடந்த சில ஆண்டுகளாக இந்த பெயரில்தான் இத்தளம் செயல்பட்டு வருகிறது.இந்த தளமானது இணையவாசிகளுக்கு புகார் செய்வதற்கான சுலபமான வழியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கும் அதே நேரத்தில் எந்த வகையான குற்றங்களை எந்த துறை கையாள வேண்டும் என்று பரிந்துரைக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.இதில் புலனாய்வுத் துறையினரின் பணியை மிகவும் சுலபமானதாக்கி விடுகிறது. அதே நேரத்தில் இதில் பதிவாகும் குற்றங்கள் தற்போது இன்டெர்நெட்டில் குற்றச் செயல்களின் போக்கு எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை உணர்ந்து கொள்ளக் கூடிய வகையிலும் இருக்கிறது. இது இணையவாசிகளின் விழிப்புணர்வை உறுதி செய்வதோடு புலனாய்வுத் துறையினரையும் துடிப்போடு இருக்க வைக்கிறது.இந்த தளத்தின் மூலம் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த புகார்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப குற்றங்கள் கண்டுபிடிக்கப்படும் வேகமும் அதிகரித்தால் நல்லதுதான்.

சொன்னது நீ(ங்கள்)தானா!

அமெரிக்க அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு பயப்படு கின்றனரோ இல்லையோ அவர்கள் கையில் இருக்கும் டிஜிட்டல் ஆயுதங்களை நினைத்து அஞ்சியே ஆக வேண்டும்! இல்லையேல் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு அமெரிக்க வாக்காளர்கள் இன்டெர் நெட்டின் சக்தியை அரசியல் நோக்கில் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.
.
இதற்கான சமீபத்திய உதாரணம் "ஸ்பீச்சாலஜி' "யூடியூப்' பாதி "ஃபேக்ட்செக்' மீதி என்று வர்ணிக்கப்படும் இந்த தளம், வாக்காளர்களை அரசியல் நிபுணர்களாக்கி அரசியல்வாதிகளை அடிபணிய வைக்க நினைக்கிறது.அதாவது அரசியல்வாதிகள் தாங்கள் பேசிய பேச்சுகளுக்கும், சொன்ன கருத்துக்களுக்கும் பொறுப்பேற்க வைக்கிறது இந்த தளம். இதையே வேறு விதமாகச் சொல்வதானால், பொதுமக்களின் நினைவுத்திறன் குறுகிய காலத்திலானது என்று ஒரு கருத்து உண்டல்லவா, அதைப்பற்றி பொதுமக்கள் நினைவுத்திறனை யூடியூப் வீடியோ கோப்புகள் மூலம் நீடித்து நிலைக்க வைக்கிறது. அரசியல்வாதிகள் சொன்ன வார்த்தைகளையும் சரி செய்த தவறுகளையும் சரி, பொது மக்கள் சுலபத்தில் மறந்து விடுகின்றனர் என்பதை குறிப்பதற்காக இவ்வாறு குறிப்பிடுவதுண்டு.பொதுமக்கள் நினைவுத் திறன் மீதான நம்பிக்கையால் (அ) இதுதான் இயல்பு என்பதாலோ அரசியல் வாதிகள், தங்கள் சொல்லையும் செயலையும் சுலபமாக மாற்றிக்கொண்டு விடுகின்றனர். நேற்று வரை ஒரு நிலைப்பாடு இருக்கும்! இன்று பார்த்தால் தளத்தை மாற்றிப்போட்டு வேறு விதமாக பேசத்தொடங்கி இருப்பார்கள். குறிப்பிட்ட கொள்கைக்காக உயிரையும் கொடுப்பேன் என்னும் விதமாக பேசியிருப்பார்கள். திடீரெனப் பார்த்தால் அந்த கொள்கைக்கு நேர் எதிரான செயலில் ஈடுபட்டிருப்பார்கள்.அரசியல்வாதிகளின் பொது இயல்பு என்று இதனைச் சொல்லலாம். ஆனால் இந்த தடமாற்றத்தை சுட்டிக்காட்டுவதும், தட்டிக்கேட்பதும் சாத்தியமா?பெரும்பாலும் இது பொறுப்புள்ள பத்திரிகையாளர்களால் செய்யப்பட வேண்டிய பணி! அரசியல் தலைவர் பாதை மாறியதையும் தான் பேசி வந்ததற்கே எதிராக நடந்து கொள்வதையும் கண்காணித்து தோலுரித்துக் காட்டுவதை பத்திரிகையாளர்கள் செய்தாக வேண்டும்!ஆனால் இன்று பத்திரிகைகளையும் முழுவதுமாக நம்ப முடிவதில்லை. இதற்கான காரணங்களை விட்டுத் தள்ளுங்கள், இந்தப்பணியை வாக்காளர்களே தங்கள் கையில் எடுத்துக்கொள்ளலாம் என்ற தெம்பை அமெரிக்க வாக்காளர்கள் மத்தியில் ஸ்பீச்சாலஜி(Speechology.org) தளம் ஏற்படுத்தியிருக்கிறது.நம்மூரை விட அமெரிக்க அரசியல்தளம் வண்ணமயமானது. வெறும் மேடை பிரச்சாரம், பேரணி என்ற நிலையில் இருந்து மாறுபட்டு, நேரடி தொலைக்காட்சி விவாதம், வாக்காளர்களுடன் நேருக்கு நேர் என அமெரிக்க தேர்தல் அரங்கம் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் உயிர்த்துடிப்புடன் கூடவே ஒரு வித பொழுதுபோக்கு அம்சத்தோடு அமைந்திருக்கிறது. அதிலும் இப்போது யூடியூப் யுகத்தில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வீடியோ கோப்புகளையும் பயன் படுத்த தொடங்கி யிருக்கின்றனர்.விளைவு, எங்கு பார்த்தாலும் வேட்பாளர்களின் வீடியோ வேண்டுகோள்கள்தான்! யூடியூப்பில் பிரச்சாரத்திற்கு என்றே வேட்பாளர்கள் சார்பில் தனிப்பகுதிகள் தொடங்கப் பட்டு, மைஸ்பேஸ் போன்ற இளைஞர்கள் கூடும் தளங்களில் வேட்பாளர்கள் வீடியோ கோப்புகளில் வாக்காளர்களுக்கு வலை வீசுகின்றனர்.ஆனால் இத்தனைக்கும் மத்தியில் வேட்பாளர்கள் தயங்காமல் பொய் பேசுகின்றனர். சொன்னதை அழகாக மாற்றிச்சொல்லி தப்பிச் செல்கின்றனர். விவாத மேடையிலோ நேர் காணல்களிலோ இவற்றை சுட்டிக்காட்டி விளக்கம் கேட்டாலோ, மழுப்பலாக பதில் சொல்லி நழுவிச் சென்று விடுகின்றனர்.இந்தக்கதை இனி நடக்காது என்று சொல்வதுதான் ஸ்பீச்சாலஜி.இந்த அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் வீடியோ காட்சிகள் அனைத்தையும் இந்த தளத்தில் பார்க்கலாம். வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஆற்றிய உரைகள், தொலைக்காட்சி பேட்டி மற்றும் விவாதத்தில் தெரிவித்த கருத்துக்கள் என சகலமும், வீடியோ கோப்புகளாக இந்த தளத்தில் அரங்கேறி இருக்கும்.இந்த வீடியோ காட்சிகளை வேட்பாளர்களின் பெயரை குறிப்பிட்டு தேடும் வசதியும் உண்டு. வீடியோ காட்சி தொடர்பான தலைப்புகளின் அடிப்படையிலும் தேடலாம். அதன்பிறகு அலசி ஆராய்ந்து, குற்றம் குறைகளை வாக்காளர்களோ சுட்டிக்காட்டலாம். அதாவது வேட்பாளர்கள் எப்படி முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர். எங்கெல்லாம் உண்மையை பேசாமல் அடக்கி வாசிக்கின்றனர். எந்த இடத்தில் எல்லாம் மனமறிய பொய் சொல்கின்றனர் போன்ற விஷயங்களை எல்லாம் வாக்காளர்கள் புட்டுப்புட்டு வைக்கப்படும். இதற்கு ஆதாரமாக அவர்களின் வீடியோ பேச்சை வைத்துக்கொண்டு வேறு இடங்களில் அவர்கள் சொன்ன கருத்துக்களை திரட்டி, அலசிப் பார்த்து தவறுகளை சுட்டிக்காட்டி, முகத்திரையை கிழிக்கலாம். இதைத்தான் இந்த தளம், வாக்காளர்களின் ஆய்வு அலசலில் உருவான அரசியல் விமர்சனம் என்று குறிப்பிடுகிறது. இப்படி வாக்காளர்களோ விழிப் புணர்வோ விமர்சனப் பணியை செய்வதால், தேர்தல் களத்தில் இருப்பவர்கள் தங்கள் நோக்கத்திற்கு ஏற்ப உண்மையை வளைப்பதோ, மறைப்பதோ சாத்தியமில்லை!ஏற்கனவே ஃபேக்ட் செக் (fact check.org)என்னும் இணையதளம் இப்படி அமெரிக்க அரசியல்வாதி பேச்சுக்கள், உரையாடல்கள், பேட்டிகளை கண்காணித்து அவர்கள் தவறுகளை அம்பலப்படுத்தி வருகிறது.ஸ்பீச்சாலஜி மொத்த பொறுப்பை வாக்காளர்களிடமே ஒப்படைத்தி ருக்கிறது. அதுவும் வீடியோ ஆயுதத்தோடு.

என்ன விலை அரசே!

நீங்கள் மார்க்கெட்டிற்கோ அல்லது உங்கள் தெருக்கோடியில் உள்ள கடைக்கோ சென்று காய்கறி வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது தக்காளிக்கும், கத்திரிக் காய்க்கும் கடைக்காரர் சொல்லும் விலையை கேட்டு நீங்கள் திகைத்து போகிறீர்கள்.
.
அன்னிச்சையாக செல்போனை கையில் எடுத்து பார்க்கிறீர்கள். உடனே கடைக்காரர் சொன்ன விலை யிலிருந்து கொஞ்சம் இறங்கி வருகிறார். நீங்கள் மறுபடியும் செல் போனை பார்க்கிறீர்கள். திருப்தியோடு கடைக்காரர் சொன்ன விலைக்கு காய்கறிகளை வாங்கிக் கொண்டு நடையை கட்டுகிறீர்கள்.அடுத்ததாக மளிகைக்கடைக்கு செல்கிறீர்கள். அங்கேயும் உங்கள் செல்போனை கையில் எடுப்பதை பார்த்ததும் கடைக்காரர் சரியான விலையை சொல்கிறார். செல்போனை எடுத்தவுடன் அப்படி என்ன மாயம் நிகழ்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். செல்போன் மூலம் தெரிய வரும் தகவல்களால்தான் இந்த மாற்றம் நிகழ்கிறது.இப்போதைக்கு இந்தியர்களாகிய நாம் இந்த வசதியை அனுபவிக்க வாய்ப்பில்லை. ஆனால் இத்தாலியில் உள்ள நுகர்வோருக்கு இந்த வசதி சாத்தியமாகி இருக்கிறது. அதாவது சந்தையில் நிலவும் சரியான விலை என்ன? என்பதை தெரிந்து கொண்டு கடைக்காரர்கள் சொல்லும் விலை நியாயமானதா? அல்லது அநியாய மானதா? என்பதை தெரிந்து கொள்ளும் வசதி.தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்று சொல்லப்படுவதுண்டு. இத்தாலியில் அதிகரித்து வரும் விலைவாசியின் விளைவாக, நுகர் வோருக்கு ஆசுவாசமளிக்கும் சேவையை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டு அரசே இந்த சேவையை வழங்க முன் வந்திருக்கிறது.கடந்த சில மாதங்களாக உணவுப் பொருட்களின் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. பல பொருட்களின் விலை எக்கச்சக்கமாக ஏறி இருக்கிறது. இதில் குறிப்பிட்ட ஒரு நாட்டில் மட்டுமே உள்ள நிலையாக இல்லாமல் உலகம் முழுவதும் இப்படித்தான் இருக்கிறது.உணவுப் பொருட்கள் நெருக்கடி காரணமாக பல நாடுகளில் விலை வாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலியும் இதற்கு விதிவிலக்கல்ல.அந்நாட்டிலும் மளிகைப் பொருட்கள், உணவு தானியங்கள் மற்றும் காய்கறியின் விலை கணிசமாக அதிகரித்திருக்கிறது.அதுமட்டுமல்ல, நாளுக்கு நாள் இந்த பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. விலைவாசி உயர்வு சந்தை நிலவரத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்றாலும், இதனை பயன்படுத்திக் கொண்டு வியாபாரிகள் விலையை இன்னும் கொஞ்சம் கூடுதலாக உயர்த்துவது உண்டு.நுகர்வோர் இந்த கூடுதல் விலையை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு உண்டா? அப்படி தெரிந்து கொள்ள முடிந்தால் பேரம் பேசி, விலையை குறைக்கலாம். அல்லது புறக்கணித்து விட்டு வேறு கடைக்கு சென்று விடலாம். ஆனால் சந்தையில் அப்போதைய உண்மையான விலை என்னவென்பதை நுகர்வோர் அறிந்து கொள்வது எப்படி?இந்த கேள்விக்கான பதிலைதான் இத்தாலிய அரசு வழங்கி இருக்கிறது. அந்நாட்டு விவசாயத்துறை அமைச்சகம் நுகர்வோர் அமைப்பு களோடு இணைந்து, எஸ்எம்எஸ் மூலம் அப்போதைய சந்தை விலை நிலவரத்தை அறிந்து கொள்ளும் சேவையை அறிமுகம் செய்திருக்கிறது.இதன்படி நுகர்வோர் அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டு தாங்கள் வாங்க விரும்பும் காய்கறி அல்லது மளிகை சாமானை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பினால் அன்றைய தினம் இத்தாலியில் பல்வேறு சந்தைகளில் என்ன விலைக்கு அந்த பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன என்பதை எஸ்எம்எஸ் மூலம் அரசு தெரிவிக்கும். அந்த விலை விவரத்தை கையில் வைத்துக் கொண்டு கடைக்காரர் சொன்ன விலையோடு ஒப்பிட்டு அது அதிகபடியானதா?, அதிகபடியானது என்றால் எந்த அளவுக்கு அதிகமானது என்பதை நுகர்வோர் தெரிந்து கொள்ள முடியும். இந்த தகவல் கையிலிருக்கும் தைரியத்தோடு வியாபாரியோடு வாதிடலாம். பேரம் பேசலாம், அல்லது நடையை கட்டலாம்.சாதாரணமாக விலையை குறைப்ப தற்காக வாதிடும் நுகர்வோரை விட சந்தையில் நிலவும் விலை நிலவரத்தை தெரிந்து கொண்டு வாதிடும் நுகர்வோரிடம் வியாபாரி அடாவடியாக நடந்து கொள்ள வாய்ப்பில்லை.எனவே நியாயமான விலைக்கே அவர் பொருட்களை விற்க வேண்டி வரும். சந்தையில் தேவை மற்றும் உற்பத்திக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் விலை நிலவரத்தை நுகர்வோர் தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் பொருட்களை வாங்குவது பற்றி முடிவெடுக்க உதவுவதே இந்த சேவையின் நோக்கம் என்று இத்தாலிய விவசாய அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.அந்நாட்டின் நுகர்வோர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த சேவையை பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். விரைவில் இந்த சேவை பெரிய அளவில் பிரபல மாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.சந்தையை பொறுத்தவரை தகவல் களே முக்கிய பங்கு வகிப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். சரியான தகவல்கள் நுகர்வோருக்கு தெரிய வருமானால் விலையும், தரமும் சரியானதாகவே இருக்கும் என்று பரவலாக கருதப்படுகிறது.இதுவரை கடைக்காரர் சொல்லும் விலையை தவிர வேறு எந்த விவரத்தையும் நுகர்வோர் தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. அதற்கு மாறாக தற்போது நுகர்வோர் சந்தை விலை நிலவரத்தை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த எஸ்எம்எஸ் சேவை வழிவகுக்கிறது.

இசைப்பட சம்பாதிப்போம்

இசைப்பட வாழ்வது பற்றி தமிழ் கவிதை பேசுகிறது. இப்போது இசைப்பட சம்பாதிப்பதற்கான வாய்ப்பை இன்டெர்நெட் ஏற்படுத்தி தந்துள்ளது. இசைப் பிரியர்களுக்கு பொற்காலம் என்று சொல்லக் கூடிய வகையில், இன்டெர்நெட் பாடல்களை பகிர்ந்து கொள்ள சுலபமான வழியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இது காப்புரிமை மீறும் செயல் என்பதால் இணையவாசிகள் வழக்கு மற்றும் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்ட காலமும் வெகு வேகமாக மலையேறி வருகிறது.
.
தற்போது காப்புரிமை சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் அதே நேரத்தில் புதிய தொழில்நுட்பம் வழங்கும் பகிர்தல் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பாடல்களை கேட்டு மகிழ்வதற்கான புதிய வழிகள் பல அறிமுகமாகி இருக்கின்றன.சொல்லப் போனால் மற்ற எந்த துறையையும் விட இசை சார்ந்த துறையில் புதிய சேவைகளும், அவற்றை முன்வைக்கும் இணையதளங்களும் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன.இந்த வகையில் தற்போது வந்திருப்பதுதான் இணையவாசிகள் இசைப்பட பொருளீட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் இணையதளம். மிக்சாலூ எனும் வித்தியாசமான பெயரை கொண்டு அறிமுகமாகி உள்ள இந்த இணையதளம், இசைப் பிரியர்கள் எந்தவித முயற்சியும் இல்லாமல் வருவாய் ஈட்டுவதற்கான வழியை காண்பிக்கிறது. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தங்களுக்கு பிடித்த பாடல்களை வரிசைப்படுத்தி அவற்றை நண்பர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டியதுதான். எத்தனை நண்பர்கள் அந்த பாடல்களை கேட்டு மகிழ்கின்றரோ அந்த அளவுக்கு அவர்களுக்கு வருவாய் கிடைக்கும்.நண்பர்களுக்கு பாடல்களை பரிந்துரை செய்வதன் மூலமே பொருளீட்டலாம் என்று சொல்வது முதலில் மிகச் சுலபமானதாக இருக்கிறதே என்று எண்ண வைக்கும். அடுத்த நொடியே இது ஏதோ மல்டி லெவல் மார்க்கெட்டிங் மோசடி போன்ற செயலாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழலாம். இந்த முறை சுலபமானதே தவிர நிச்சயமாக மோசடியானது இல்லை. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ஒரு சாதாரண பழக்கத்தை அனைவருக்கும் பணம் பெற்றுத் தரக் கூடிய வழியாக மாற்றும் ஒரு புத்திசாலித்தனமான முயற்சி இது.மேற்கத்திய நாடுகளில் மிக்ஸ்டேப் என்று ஒரு கலாச்சாரம் உண்டு. பெயரை கேட்டவுடன் இது ஏதோ புதிய சங்கதி என்று நினைத்து விட வேண்டாம். நமக்கு பிடித்தமான பாடல்களை நாம் தேர்ந்தெடுக்கும் வரிசையில் பதிவு செய்து கொள்வதையே இப்படி மிக்ஸ்டேப் என்று சொல்கின்றனர்.பொதுவாக கேசட்டில் இப்படி இசைப் பிரியர்கள் பல்வேறு ஆல்பங்களிலிருந்து பாடல்களை தேர்வு செய்து பதிவு செய்து கொள்வார்கள். நம்ம ஊரில் கேசட்டில் சினிமா பாடல்களை தேர்வு செய்து பதிவு செய்து கொள்வதில்லையா அது போல.ஆனால் மிக்ஸ்டேப் கலாச்சாரத்தில் என்ன விசேஷமென்றால், அங்கே நிலவும் ஆல்பம் சார்ந்த சூழ்நிலையில், இது இசைப் பிரியர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கான வாய்ப்பாக அமைவது என்பதுதான்.எல்லா இசை வெளியீடுகளுமே நிறுவனமயமாக்கப்பட்டு ஒரு முழுமையான ஆல்பமாக முன் தீர்மானிக்கப்பட்ட வடிவில் வெளிவரும் நிலையில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த பாடலை தேர்வு செய்து பதிவு செய்து கொள்வது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த சிடி யுகத்திலும் கூட இது தொடர்கிறது.மிக்சாலூ இணையதளம் இந்த மிக்ஸ்டேப் கலாச்சாரத்தை டிஜிட்டல் உலகத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அதாவது இசைப் பிரியர்கள் தங்களது மிக்ஸ்டேப் பதிவுகளை இந்த தளத்தில் இடம் பெற வைத்து தங்களது நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இந்த தளத்தில் இடம் பெற வைப்பதோடு தங்களது பிளாக் தளம் மற்றும் பேஸ்புக் பக்கங்களிலும் இடம் பெற வைத்து அதன் மூலமும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.இந்த சேவை இலவசமானது. ஆனால் நண்பர்கள் அந்த பாடல்களை கேட்டுப் பார்த்து அவை பிடித்துப் போய் வாங்க நினைத்தால் கட்டணம் செலுத்த வேண்டும்.அப்படி அவர்கள் வாங்கும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பாடலை பரிந்துரை செய்தவர் என்ற முறையில் இசைப் பிரியர்களுக்கு வழங்கப்படும். ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்கும் போது ஒவ்வொருவரின் தனிப்பட்ட ரசனைக்கேற்ப பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் பாடல்களிலிருந்து நாம் இதுவரை கேட்டிராத நல்ல பாடல்களை அறிமுகம் செய்து கொள்ள முடியும்.நாமே கூட நம்மிடம் எத்தனை கேசட் இருந்தாலும் நண்பர்கள் வைத்திருக்கும் கேசட்டின் பட்டியலை பார்த்து அதில் உள்ள அபூர்வ பாடல்களை இணங்கண்டு வியந்து போவதுண்டல்லவா. இதுதான் மிக்ஸ்டேப்பின் பலம்.தற்போது இசைப் பிரியர்கள் இதனை இன்டெர்நெட் மூலம் சக இசைப் பிரியர்களோடு பகிர்ந்து கொள்வதற்கான வழியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. அதன் மூலம் வருவாயையும் ஈட்டலாம் என்கிறது.

மலேரியா இனி இல்லை

கொடிது, கொடிது மலேரியா கொடிது என்று சொல்லப்படுவதன் தீவிரத்தை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள வாய்ப்பில்லை.
.
குறைந்தபட்சம் நகர்புற வாழ் இந்தியர்களுக்கேனும் மலேரியா அச்சுறுத்தக் கூடிய நோயாக தோன்ற வாய்ப்பில்லை. மலேரியாவை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் போதிய மருந்துகள் இருக்கின்றன.மலேரியா ஒரு காலத்தில் கொடிய நோயாக விளங்கியது என்னவோ உண்மைதான். மலேரியா என்றாலே அலறும் அளவுக்கு உயிரை பறிக்கும் நோயாக இருந்திருக்கிறது. ஆனால் தற்போது மலேரியாவை குணமாக்குவதற்காக மருந்துகள் வந்துவிட்டன.ஐரோப்பாவில், ஆசியாவின் பல பகுதிகளில் மலேரியா நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஏழைகள் நிறைந்த ஆப்பிரிக்க நாடுகளை பொறுத்த வரை இவ்வாறு கூற முடியவில்லை.ஆப்பிரிக்காவில் மலேரியா இன்னமும் உயிர்க்கொல்லி நோயாக நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. மலேரியாவின் பிடியில் ஆப்பிரிக்க கண்டம் சிக்கித்தவிப்பதை பார்த்தால் ஐயோ பாவம் ஆப்பிரிக்கா என்றே சொல்ல தோன்றும்.இந்த நோயினால் ஆப்பிரிக்கா படும் பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நேஷனல் ஜியாகரபிக் இதழில் மலேரியா நோய் பற்றி வெளியாகி உள்ள முகப்பு கட்டுரையை படிக்க வேண்டும். அதற்கு நேரம் இல்லாதவர்கள் ஒரு சில புள்ளி விவரங்களையாவது தெரிந்து கொள்ள வேண்டும்.ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒவ்வொரு 30 விநாடிக்கும் ஒரு குழந்தை மலேரியாவுக்கு பலியாகி கொண்டிருக்கிறது.ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள், மலேரியா தாக்குதலில் தப்பிப் பிழைப்பது என்பது அபூர்வமாகவே இருக்கிறது. அப்படியே தப்பிப் பிழைத்தாலும் அவர்கள் ஆயுள் முழுவதும் லேசான மூளைகோளாறு அல்லது கற்றுக் கொள்வதில் குறைபாடு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகின்றனர்.கர்ப்பிணிகள் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டால் பிறக்கும் குழந்தை ரத்தச் சோகையோடு வளர நேர்கிறது. சுருக்கமாக சொன்னால் ஆப்பிரிக் காவில் குழந்தைகள் மத்தியில் ஏற்படும் அகால மரணத்திற்கு மலேரியாவே முன்னணி காரணமாக விளங்குகிறது.இத்தோடு பாதிப்பு நின்று விடுவதில்லை. பொருளாதார மற்றும் சமூக ரீதியாகவும் பாதிப்புகள் தொடர்கின்றன. நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.மலேரியா நோய் அச்சத்தால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படுகிறது. வெளிநாட்டு முதலீடும் குறைந்து போகிறது. ஆப்பிரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 1200 கோடி டாலர்கள் பொருளாதார இழப்பை மலேரியா நோய் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.மலேரியாவுக்கு எதிரான தற்காப்பு வசதியோ அல்லது சிகிச்சைக்கான வாய்ப்போ இல்லாத ஏழைகளையே இந்த நோய் அதிகம் பாதிக்கிறது என்பதோடு, இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையை இந்த நோயே குலைத்து விடுகிறது.இந்த நோயை கட்டுப்படுத்துவது சாத்தியம் மற்றும் நோய்க்கான சிகிச்சையும் இருக்கிறது என்னும் நிலையில் ஆப்பிரிக்கா இப்படி படாதபாடுபடுவது வேதனை யானதுதான்.இந்த வேதனையில் பங்கேற்க நினைத்தால் அதை விட முக்கியமாக இந்த பிரச்சனைக்கு உங்களால் முடிந்த அளவுக்கு தீர்வு காண நினைத்தால் நோ மோர் மலேரியா (Nணி ட்ணிணூஞு ட்ச்டூச்ணூடிச்.ணிணூஞ்). இணையதளம் பற்றி தெரிந்து கொள்வது அல்லது ஆப்பிரிக்கா நாடுகளில் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த நோய் தாக்காமல் தடுக்கவும் தேவையான உதவிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது.மலேரியா நோய் ஏன் ஏற்படுகிறது. அது எப்படி பாதிப்பை செலுத்துகிறது போன்ற விளக்கங்களை சுருக்கமாக அளிக்கும் இந்த தளம் அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை யும் தெரிவிக்கிறது.மலேரியாவை குணமாக்கு வதற்கான மருந்துகள் உலகின் மற்ற பகுதிகளில் எளிதாக கிடைக்கும் நிலையில் ஆப்பிரிக்க மக்கள் மட்டும் இந்த நோயின் பாதிப்புக்கு இலக்காகி உயிரை விடுவது பரிதாபத்துக்குரியது என்பதை உணர்த்தி அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த தளம் தூண்டுகோலாக விளங்குகிறது.மலேரியாவை கட்டுப்படுத்த விரிவான செயல்பாடுகள் தேவை என்பதை விளக்கும் இந்த தளம், பிரதானமாக கொசு வலையில் வாங்கி கொடுப்பது பேரூதவியாக இருக்கும் என்று தெரிவிக்கிறது. பெரும்பாலும் மலேரியாவை பரப்பும் கொசுக்கள் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடிப்பதால் கொசு வலையை பயன்படுத்துவது இந்த நோய்க்கு ஆளாகும் வாய்ப்பை வெகுவாக குறைத்து விடுகிறது.அதிலும் கொசுக்களை விரட்டும் தன்மை கொண்ட மருந்து தடவப்பட்ட கொசு வலை நோயின் தாக்கத்தை முற்றிலுமாக விலக்கி விடுகிறது.இதை தவிர நோய் பாதிப்பவர் களுக்கு மருந்துகளை வழங்குவது, நோய் பரவாமல் தடுக்க தேவையான சூழ்நிலையை ஏற்படுத்துவது போன்ற விழிப்புணர்வு செயல் களையும் இந்த தளம் மேற்கொண்டு வருகிறது. இந்த தளத்தின் மூலமே நன்கொடை வழங்கி இந்த முயற்சியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அது உயிர் காக்கும் சேவையாக இருக்கும்.

தொட்டால் இசை மலரும்

எல்லாம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்று சொல்வது தன்னம்பிக்கையின் அடையாள மாகவும் இருக்கலாம். எதிர்பார்ப்பின் விளைவாகவும் இருக்கலாம். இதே வாசகத்தை ஆப்பிள் நிறுவனம் சொல்லும் போது "ஐபோன்'ல் சாத்தியமாகக் கூடிய தொழில்நுட்ப அற்புதமாக பொருள்கொள்ள வேண்டும்.
.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாடு இசை கேட்பு சாதனமாகட்டும், அதன் அடுத்த அவதாரமான ஐபோன் ஆகட்டும், இரண்டு டச்ஸ்கிரீன் என்று சொல்லப்படும் தொடுதிரையின் அற்புதத்தை அடிப்படையாக கொண்டு இயங்குபவை. ஐபாடு (அ) ஐபோனை இயக்க அவற்றின் திரையின் மீது கை வைத்து அப்படியும் இப்படியும் கோலம் போடுவது போல் விரல்களை நகர்த்தினாலே போதும்.ஐபோன் புரட்சிகரமானது. இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் மேம்பட்ட சாப்ட்வேரை கொண்டது. இதன் தொடுதிரை வசதியை கொண்டு, உங்கள் கைவிரல்கள் மூலமே எல்லாவற்றையும் நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.ஆப்பிள் ஐபோன் மற்றும் அதன் நீட்சியான ஐடச் பற்றி இப்படிதான் பெருமை பட்டுக்கொள்கிறது.என்றாலும் நாம் தொடர்ந்து பார்க்க இருப்பது ஐபோன் பெருமை பற்றி அல்ல. "ஐபேன்ட்' பெருமை பற்றி!"ஐபோன்' போன்ற உச்சரிப்பை கொண்டிருந்தாலும் "ஐபேன்ட்' இன்னொரு டிஜிட்டல் சாதனமும் அல்ல' ஆப்பிள் நிறுவனத்திற்கும், அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஐபேன்ட் ஒரு இசைக்குழு நவீன இசைக்குழு! மற்ற எந்த இசைக்கருவியிலிருந்தும் முற்றிலும் வேறுபட்ட இசைக்குழு ஐபோனை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட, புதுயுக இசைக்குழு! ஒரு இசைக்குழுவை அமைக்க ஒரு சில இசைக் கலைஞர்களும், ஒரு சில இசைக்கருவிகளும் கட்டாயம் தேவை. ஐபேன்ட் இசைக்குழுவில் இசைக்கலைஞர்கள் உண்டு. ஆனால் இசைக் கருவிகள் கிடையாது. அவற்றுக்கு பதிலாக ஐபோன்கள் தான் இருக்கின்றன. ஆஸ்திரியாவைச் சேர்ந்த செப், ரோஜர், மற்றும் மரீனா ஆகிய மூவர் ஒன்று சேர்ந்து ஐபேன்ட் இசைக் குழுவை உருவாக்கி உள்ளனர். மூவரும் கலை கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப விஷயத்தில் தேர்ச்சிமிக்கவர்கள். அதனால் தான் இசைக்கருவிகள் ஏதுமில்லாமல், ஆப்பிளின் ஐபோனை மட்டுமே வைத்துக் கொண்டு இசையை உருவாக்கி அதன் மூலம் இன்டெர் நெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர்.கையுறையை மாட்டிக் கொண்டு ஐபோனில் தொடு திரை மீது இரண்டு விரல்களை தொட்டு அசைப்பதன் மூலமே இசை ஒலிகளை உண்டாக்கி சங்கீத சாகசத்தை நிகழ்த்திக் காட்டி உள்ளனர்.கடந்த பிப்ரவரி மாதம் இந்த இசை வீடியோ கோப்பை, புகழ் பெற்ற வீடியோ கோப்பு பகிர்வு தளமான யூடியூப்பில் பதிவேற்றினர். மேஜை ஒன்றின் மீது மூன்று ஐபோன்கள் வைக்கப் பட்டிருக்கு, அவற்றின் பளிச்சிடும் தொடுதிரை மீது மூன்று ஜோடி விரல்கள் விளையாடிக் கொண்டிருக்க இசை அலையை எழுப்பிய இந்த காட்சி யூடியூப் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த காட்சியை பார்த்தவர்கள் எல்லாம் மெய் மறந்துப்போக, ஒரு சில நாட்களில் இரண்டு லட்சம் முறைக்கும் மேல் பார்த்து ரசிக்கப்பட்டது. "வாழ்க்கை இன்டெர்நெட்டை விட பெரியது' என்னும் வர்ணனையோடு வெளியான இந்த இசைக் கோப்பு காட்சியை பார்த்து வியந்து ரசித்தவர்கள் எல்லாம் எப்படி இது சாத்தியம் என்று இமெயில் மூலம் விசாரிக்கத் தொடங்கி விட்டனர்.ஐபோனை மட்டும் வைத்துக் கொண்டு இசையை உருவாக்க முடிந்தது எப்படி என்று பலரும் அறிய விரும்பினர். இந்த வரவேற்பும், ஆர்வமும் மூவர் குழுவை வியப்பில் ஆழ்த்தியது. இத்தனைக்கும் அவர்கள் உருவாக்கிய இசை பாட்டுடன் மெட்டு போன்ற ஒலியாக இருந்ததே தவிர துல்லியமான இசையாக இல்லை. ஆனால் வெறும் ஐபோனை கொண்டு உருவாக்கப் பட்டதால் அனை வருக்கும் அது பிடித்துப் போய் விட்டது. இதனையடுத்து ஐபோனில் செயல்படக் கூடிய இசை சார்ந்த செயல்களை கொண்டு என்ன செய்யலாம் என உணர்த்தவே இந்த இசையை உருவாக்கினோம் என்றும் ஐபோன்களை கொண்டே "ஐபோன்ட்' என்னும் இசைக்குழுவை நடத்துவதே எங்கள் நோக்கம் என்றும் இசைக் குழுவின் சார்பில் ரசிகர்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட இசைக் கோப்பின் எம்பி3வடிவத்தை தரு மாறும் பவர் கேட்டிருந்தனர். அதன் தரம் மிகவும் மோசமானது என சங்கடத்துடன் தெரிவித்த "ஐபோன்ட்' குழுவினர் ஓரளவு மேம்படுத்தப்பட்ட இசைக் கோப்பை உருவாக்கி தங்கள் இணைய தளத்தின் மூலம் டவுண்லோடு செய்து கொள்ளலாம் என தெரிவித்தது. தொடர்ந்து சில வீடியோக்களும், ரசிகர்களுக்கான போட்டியும் கூட பதிவேற்றப்பட்டது. இன்று ஐபோன்ட் இணைய தளம் இசைப்பிரியர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. ஐபேன்ட் இசைக்குழுவின் இசை மாயத்தின் பின்னே இருப்பது, "மூகௌமியுசிக்' சாப்ட்வேராகும். ஐபோன்களை இசைக் கருவியாக இந்த சாப்ட்வேர் மாற்றி விடுகிறது. இந்த சாப்ட்வேரை பொறுத்துவதன் மூலும் ஐபோனை பியானோவாகவோ, டிரம்சாகவோ மாற்றி இசையை உருவாக்கலாம்.ஆனால் ஒன்று இந்த சாப்ட்வேருக்கும், ஆப்பிள் நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை. ஆப்பிள் இத்தகைய முயற்சிகளை ஆதரிப்பது இல்லை. உண்மையில் இவற்றை ஆப்பிள் சட்ட விரோதம் என்று சொல்லி வருகிறது. மேலும் இந்தஅனுமதி இல்லாத சாப்ட்வேரை பொருத்த ஐபோனை ஹேக் செய்ய வேண்டும். இது சுலபமானது மற்றும் இதற்கு வழிகாட்டும் குறிப்புகள் இன்டெர்நெட்டில் தாராளமாக கிடைக்கிறது.
என்றாலும், இவ்வாறு அத்துமீறி உள்ளே நுழைந்து வேறு சாப்ட்வேரை பொருத்தினால் அந்த ஐபோனின் செயல்பாட்டிற்கு நாங்கள் பொறுபல்ல என்று ஆப்பிள் ஒதுங்கி கொள்கிறது. இதனையும் மீறி பல தொழில்நுட்ப கில்லாடிகள் போனில் அனுமதி இல்லாமல் செயல்படக் கூடிய சாப்ட்வேர்களை உருவாக்கிய வண்ணம் உள்ளனர். இத்தகைய முயற்சிகளுக்கு சிகரம் வைத்தது போல அமைந்திருப்பது தான் ஐபோன்ட் குழு!

100 மாநில இந்தியா

எத்தனை மாநிலங்கள் இந்தியாவில் இருந்தால் சரியாக இருக்கும்? தற்போதுள்ள மாநிலங்களின் எண்ணிக்கையை கூட்டுவது சரியாக இருக்குமா? குறைப்பது சரியாக இருக்குமா? மாநிலங்களின் எண்ணிக்கையை யும், அவற்றின் எல்லைகளையும் வரையறுக்க சிறந்த வழி எது? மாநிலங்களை சரியாக வரையறுப் பதன் மூலம் முக்கிய பிரச்சனைகளை தீர்க்க முடியுமா?
.
சுதந்திரத்திற்கு பிறகு இந்திய மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாக மொழி பேசுபவர்களை அடிப் படையாக கொண்டு பிரிக்கப் பட்டுள்ளது. இது சரியானது என்று வாதிடுவோர் களும், நவீன இந்தியாவின் பிரச்சனைக்கு காரணமே மொழிவாரி மாநிலங்கள் தான் என்றும் கூறுபவர் களும் இருக்கிறார்கள். இதில் எது சரியானது, இந்தியாவை எப்படி பிரித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்?இதெல்லாம் சிந்தனைக்குரிய கேள்விகள். இந்த கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை சிந்திக்க முடியும். அதற்கு அமெரிக்க புவியியல் நிபுணர் இசல் பியர்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த புவியியல் பேராசிரியரான பியர்சி வரைப் படங்களை வைத்து நாட்டின் வளம் மற்றும் பிரச்சனை களை பற்றி தீவிரமாக சிந்தித்தவர்.புவியியலில் தனக்கு இருந்த நிபுணத்துவத்தை அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகியவற்றோடு ஒப்பிட்டு அந் நாட்டுக்கான புதுமையான தீர்வை அவர் முன் வைத்தார். அமெரிக்கா வுக்கான புதிய வரைப் படத்தை அவர் உருவாக்கி கொடுத்தார்.அமெரிக்க மாநிலங்களின் எண்ணிக் கையை 50லிருந்து குறைத்து 38ஆக குறைத்து, அவற்றின் எல்லைகளை வரையறை செய்து இந்த வரை படத்தை அவர் உருவாக்கி இருந்தார்.மாநிலங்களின் எண்ணிக்கையை குறைத்து அமெரிக்காவுக்கான புதிய வரைப்படத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றி பியர்சி விரிவாக விளக்கி புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார்.இந்த புத்தகத்தில் மறுவரையறை செய்யப்பட்ட எல்லைகளோடு 38 மாநிலங்களை உருவாக்குவது அமெரிக்காவுக்கு எப்படியெல்லாம் சாதகமானது என்பதை அவர் புள்ளி விவரங்களோடும், புதிய கண்ணோட் டத்தோடும் எடுத்து சொல்லியிருந்தார்.அமெரிக்காவின் வரைப்படத்தை புதிதாக உருவாக்க வேண்டும் என்று பியர்சி கூறியதற்கு முக்கிய காரணம், அந்நாட்டின் வரைப்படம் மக்கள் தொகை குறைவாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதே. மக்கள் தொகை ஒரு பிரச்சனையாக இல்லாத தால் நிலப்பரப்பின் குணாதிசயங் களை, அதாவது அவற்றின் நடுவே பாய்ந்தோடும் நதிகள், நிமிர்ந்து நிற்கும் மலைகள், பசுமையாக பளிச் சிடும் வயல்கள், அடர்ந்த காடுகள் ஆகியவற்றை கொண்டு மாநிலங்க ளின் எல்லை வரையறை செய்யப் பட்டது.எனினும் நாடு மற்றும் நகரங்களின் வளர்ச்சி காரணமாக ஒரு மாநிலத்தின் எல்லைக்கோடு மற்றொரு மாநிலத் தில் ஊடுருவும் நிலை உருவாகி விட்டது. உதாரணமாக பெரு நகரமாக உருவான நியூயார்க், பக்கத்தில் இருக்கும் இரண்டு மாநிலங்களில் ஊடுருவி இருந்து விட்டது. அதே போல வாஷிங்டன், சிகாகோ, செயின்ட் லூயிஸ் போன்ற நகரங்கள் இரண்டு, மூன்று மாநிலங்களில் எட்டிப் பார்க்கிறது.இதனால் என்னவென்று கேட்க லாம்? சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இவற்றுக்கு பொருளாதார மற்றும் அரசியல் விலையை கொடுக்க நேர்கிறது என்று பியர்சி குறிப் பிடுகிறார். நியூயார்க் நகரத்தில் அமைக்கப் படும் புதிய ரெயில் பாதைக்கான செலவை யார் ஏற்றுக் கொள்வது? அந்த நகரத்தை சேர்ந்தவர்கள் மட்டுமா? அல்லது பக்கத்தில் உள்ள நகரத்தை சேர்ந்தவர்களுமா? என்பது போன்ற கேள்விகளை பியர்சி எழுப்புகிறார்.இதே போல மேலும் பல சிந்தனைக் குரிய கேள்விகளை எழுப்பி, மாநிலங் களின் எல்லையால் ஏற்படும் கண்ணுக்கு தெரியாத மற்றும் கவனிக் கப்படாத பிரச்சனை களை அவர் விரிவாக அலசி ஆராய்கிறார்.இதற்கு மாறாக, வளர்ந்து விட்ட நகரங்களின் தன்மைக்கும், அவற்றின் மக்கள் தொகைக்கும் ஏற்ப மாநிலங் களை சரியாக பிரித்து விட்டால், இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு விடலாம். அதாவது 38 மாநிலமாக வரையறை செய்வது சரியாக இருக்கும் என்கிறார் அவர்.பியர்சி வரையறை செய்த விதத்தின் அனுகூலங்களை நாளை தொடர்ந்து பார்க்கலாம்...புவியியல் பேராசிரியரான பியர்சி, அமெரிக்க மாநிலங்களை 38 எனும் எண்ணிக்கையில் மாற்றியமைக்க வேண்டும் என்று ஆணித்தரமான வாதங்க ளோடு தனது கருத்தை முன்வைத்தார். இப்படி மாநிலங்களை மாற்றியமைப் பதன் மூலம் அந்தந்த மாநிலத்தின் நிதி ஆதாரம் அந்த மாநிலத்திலேயே செலவு செய்யப்பட வழி ஏற்படும் என்றும் அவர் கூறினார்.இதற்கு எடுத்துக்காட்டாக டெக்சாஸ் மற்றும் ரோடு ஐலேண்ட் மாநிலங் களை சேர்ந்த கவர்னர்கள் அவற்றுக்கு ஏற்ற சம்பளத்தை பெறவில்லை யென்று அவர் கூறினார். இதனை புரிந்து கொள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஜீப் வழங்கப் பட்டு அந்த ஜீப்பில் கவர்னர் நகர் உலா வந்து நிர்வாகம் செய்கிறார் என்று வைத்து கொள்வோம்.பெரிய மாநிலத்தை சேர்ந்த கவர்னர் அதிக தூரம் ஜீப்பில் உலாவ வேண்டியிருக்கும். சிறிய மாநிலத்தை சேர்ந்த கவர்னர் குறைவான தூரமே பயணம் செய்ய வேண்டியிருக்கும்.நிர்வாக விஷயத்திலும் இப்படித் தான் நடக்கிறது என்றார் பியர்சி. எனவேதான் நிர்வாக செலவுகள் சீராக கூடிய வகையில் மாநிலங்களின் எல்லைகளை நிர்ணயித்தாக வேண்டும் என்றார் அவர்.பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, 38 மாநிலங்களை அவர் உருவாக்கி கொடுத்தார்.அவர் உருவாக்கிய புதிய மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலமும் ஒரு பெரு நகரத்தை கொண்டதாக இருந்தது. அந்த நகரமும் மாநிலத்தின் மையப் பகுதியில் இருந்தது.மையப் பகுதியில் முக்கிய நகரம் இல்லாத இடங்களில் அனைத்து சிறு நகரங்களி லிருந்தும் அந்நகரை வந்தடையும் வகையில் மாநிலத்தை அவர் உருவாக்கி இருந்தார்.எல்லா நகரங்களுமே மற்ற பகுதிக்கு செல்ல ஏறக்குறைய ஒரே அளவிலான போக்குவரத்து தூரத்தை கொண்டு இருக்கும் வகையில் அமைந்திருந்தன.ஒரு மாநிலம் பெரிது, மற்றொரு மாநிலம் சிறியது என்ற நிலை இல்லாமல் எல்லாமே சீராக இருந்தன. இந்த மாநிலங்களுக்கு பெயர் வைக்கும் பொறுப்பை புவியியல் மாணவர்களிடம் விட்டு விடலாம் என்றும் பியர்சி ஆலோசனை கூறியிருந்தார்.மாநிலத்தின் கலாச்சார மற்றும் பண்பாட்டு கூறுகளுக்கு ஏற்ப அவற்றுக்கு பெயர் வைக்கப்பட வேண்டும் என்பது அவரது எண்ணம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் பொருத்த மான பெயர் என்ன என்பதற்கான உதாரணங் களையும் அவர் கூறியிருந்தார். தான் கூறிய விஷயங்களோடு ஒரு மாநிலத்தின் வளம், அவற்றின் நீர் ஆதாரம் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு மாநிலங்களின் எல்லையை வரையறை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் மாநில தலைநகரங்களை தீர்மானிப்பதற்கு தனியே விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.மாநில தலைநகரங்கள், அந்த மாநிலத்தின் தேவைகளை அரசியல் ரீதியாக மற்றும் பூகோள ரீதியாக நிறை வேற்றும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இப்போது யோசித்து பாருங்கள். இந்தியாவில் மாநிலங்களை வரையறை செய்தபோது நதிநீர் பங்கீடு பற்றி யோசித்து செயல் பட்டிருந்தால் காவிரி பிரச்சனையை தவிர்த்திருக்கக் கூடும்.ஒவ்வொரு பகுதியிலும் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப அவற்றுக் கான நீர் ஆதார வினியோகமும் இருக்க வேண்டும் எனும் தொலை நோக்கு பார்வை இருந்திருந்தால் அவற்றோடு மொழி, கலாச்சாரம், அரசியல் போன்ற அம்சங்களை யும் ஒருங்கிணைத்து பிரச்சனைக்கும் சிக்கல் இல்லாத வகையில் மாநிலங்களின் எல்லைகளை வரையறை செய்திருக்க முடியும். எப்படி பார்த்தாலும் புவியியல் ரீதியாக வரைப்படத்தை வைத்துக் கொண்டு ஒரு நாட்டின் பிரச்சனையை புரிந்து கொள்ள முயல்வது புதிய விஷயம்தான்.கால மாற்றத்திற்கேற்ப நம்முடைய சிந்தனை மற்றும் திட்டமிடுதலை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை யும், அதற்கு வரைப் படங்கள் மிகச் சிறந்த ஆயுதமாக இருக்கும் என்பதை யும் உணர்த்தும் உதாரணம் இது.வரைப்படம் சார்ந்த இத்தகைய புதுமை யான சிந்தனைகள் அநேகம் இருக்கின்றன. தி மேப் ரூம் எனும் பிளாக் தளத்தில் இந்த சிந்தனைகளை எதிர்கொள்ளலாம். உதாரணமாக அமெரிக்காவின் தற்போ தைய மாகாணங்கள் மீது வெவ்வேறு நாடுகளின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும் வரைபடம் ஒன்றை பார்க்க முடிகிறது.இதன் உள்ளர்த்தம் என்னவென்றால், இந்த நாடுகளின் ஒட்டுமொத்த வருமானம் குறிப்பிட்ட அமெரிக்க மாநிலத்தின் வருமானத்துக்கு நிகராக இருக்கிறது என்று பொருள். உலக நாடுக ளின் வறுமையையும், அமெரிக்காவின் வல்லாதிக்கத்தையும் ஒரே நேரத்தில் உணர்த்தி விடும் விமர்சன வரைபடம் இது. இதேபோல உலக நாடுகள் கோல் களாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கேள்வி கேட்கும் வரைபடம் ஒன்று இருக்கிறது.இந்த வரைபடம் சூரிய மண்டலத் தில் உள்ள கோள்களையெல்லாம் நாடுக ளாக்கி, அவற்றை வரை படத்தில் இடம் பெற வைத்திருக்கின்றன. அதன்படி வியாழன் கிரகம் ரஷ்யாவாக வும், சனிக்கிரகம் கனடாவாகவும், நெப்டி யூன் சவுதி அரேபியாகவும், செவ்வாய் கிரகம் ஸ்விட்சர்லாந்தாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. அதாவது கோல்களின் பரப்பளவை பூமியின் பரப்பளவோடு ஒப்பிட்டு அவற்றை சுருக்கிக்கொண்டால் ஒவ்வொரு கிரகமும் எந்த நாட்டின் பரப்பளவுக்கு நிகராக இருக்கிறதோ அந்த நாடு இடத்தில் அந்த கிரகத்தை வரை படத்தில் பொருத்தி விடலாம்.கோல்கள் பிரம்மாண்டமானவை என்பதால் அவற்றின் பரப்பளவை புரிந்து கொள்ள இந்த வரைபடம் கைகொடுக்கும். இந்த வரைபடத்தின் படி, சமீபத்தில் கிரகம் என்னும் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்ட புளூட்டோ எத்தனை சிறியதாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். புளூட்டோ கிரகமாக அங்கீகரிக்கப்படாமல் போனதில் அதன் பரப்பளவு ஒரு முக்கிய காரணம் என்னும் போது இந்த வரைபடத்தின் அருமையை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

நல்லதுக்கு நான் அடிமை

அமெரிக்க இளம் பெண்ணான டெப்பி டென்சர் எல்லோரையும் அடிமையாக்கி கொண்டிருக்கிறார். உங்களையும் கூட அவர் அடிமையாக்க நினைக்கிறார். இப்படி அடிமையாகிறவர்களை குறிக்க அழகான புதிய சொல் ஒன்றையும் உருவாக்கி உள்ளார்.
.
இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற் கென்றே ஒரு இணைய தளத்தை அமைத்திருக்கிறார். அந்த தளத்தில் நுழைந்தீர்கள் என்றால் நீங்களும் அடிமையாகி விடும் வாய்ப்பு இருக்கிறது. அடிமை என்றதுமே பொதுவாக உருவாகக் கூடிய சித்திரத்தை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அன்புக்கு நான் அடிமை என்று சொல்வது போல, "டெப்பி' அனைவரும் நல்லதுக்கு நான் அடிமை என்று சொல்ல வேண்டும் என விரும்புகிறார்.அதாவது எப்படியும் நல்லது செய்வேன் என்னும் தீர்மானமான எண்ணத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்த விரும்புகிறார். நல்ல தையே நினையுங்கள், பிறருக்கு நல்லது செய்யுங்கள் என்று உபதேசிக்காத மகான்களே கிடையாது தான். எல்லா மதங்களும் இதையே தான் போதிக்கின்றன. இருப்பினும் உலகை தீமைகளும், வன்முறைகளும் தான் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. போரும், உள்நாட்டுப் போரும் கோலோச்சும் உலகில் நல்லதுக்கு காலமில்லை என்றே பலருக்கும் சொல்லத் தோன்றும்.நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது, "டெப்பி'யும் இதே கருத்தை தான் கேட்க நேர்ந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் அவரது தோழிகள், நகரில் வன்முறை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டது பற்றி கவலைப் பொங்க பேசிக் கொண்டிருந்தனர். எங்கும் வன்முறை மயம் என்றாலும், உலகை மாற்ற நம்மால் எதுவுமே செய்ய முடியாது என்னும் வேதனை யோடு உரையாடல் முடிந்தது.அப்போது "டெப்பி' மனதில், "நம்மால் ஏன் முடியாது?' என்னும் கேள்வி எழுந்தது. உலகம் நல்லவிதமாக இருக்க வேண்டும் என்பது நல்ல எண்ணம்தான். ஆனால் தனி மனிதர்களால் என்ன தான் செய்து விட முடியும்? டெப்பியும் இதனை அறிந்தே இருந்தார். இந்த யதார்த்தத்தை மீறி, அவருக்குள் உலகை மாற்ற ஏதாவது செய்ய முடியாதா? என்னும் கேள்வி எழுந்தது. பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வர முடியாது என்றாலும், நம்மால் முடிந்த சின்ன சின்ன விஷயங்களை செய்யலாமே என்று அவர் நினைத்தார்.உலகில் போரை முடிவுக்கு கொண்டு வர என்னால் முடியாது தான். ஆனால் போர்முனையில் இருக்கும் ராணுவ வீரர் தனது மனைவி, பிள்ளைகளோடு பேசுவதற்கான செல்போன் கார்டை அனுப்பி வைக்க முடியுமே! பள்ளி கட்டிடங்கள் எல்லாம் மேம்படுத்தி விட முடியாமல் போகலாம். ஆனால் பள்ளி மாணவர்கள் சிலருக் கேனும், பென்சில், நோட்டுப் புத்தகங்களை வாங்கித்தருவது சுலபம் தானே! இப்படி நூறுவிதமான சிந்தனைகள் அவர் மனதில் அலைமோதின. இதை எல்லாம் செய்வது என அவர் தீர்மானித்தார். தினந்தோறும் இல்லை என்றாலும், வாரம் ஒரு முறை ஒரு நல்ல செயலை செய்வது என முடிவு செய்து கொண்டார். இதற்காக திங்கள் கிழமை தேர்வு செய்து கொண்டார். ஒவ்வொரு திங்கள் கிழமை அன்றும், அன்பையும், கருணையையும் வெளிப்படுத்தும் ஒரு நல்ல செயலை செய்து வந்தார். தனது நண்பர்களையும் அதில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார்.இது நல்ல விஷயமாக இருக்கிறதே என பாராட்டிய நண்பர்கள், இந்த செயல்களை இணைய தளத்தில் இடம் பெற வைக்கலாமே என்று யோசனை கூறினர். டெப்பிக்கும் அந்த யோசனை பிறந்திருந்தது. தான் மட்டும் செய்வதோடு மற்றவர்களையும் பங்கேற்கச் செய்தால் சிறப்பாக தானே இருக்கும் என்ற உணர்வுடன் இணைய தளம் ஒன்றை அமைத்தார். இவ்வாறு உருவானதுதான் டூ ஒன் நைஸ் திங் (ஈணிணிணஞுணடிஞிஞுtடடிணஞ்.ஞிணிட்) இணைய தளம். ஒவ்வொரு திங்கள் கிழமையும், தான் செய்ய உள்ள நல்ல செயல் பற்றி இந்த தளத்தில் குறிப்பிட்டு, அதில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்தார். மெல்ல மற்றவர்களும் இந்த எண்ணத் தால் ஈர்க்கப்பட்டு ஆர்வத் துடன் பங்கேற்கத் தொடங்கினர். 2005ம் ஆண்டு தொடங்கப் பட்ட இந்த தளம் இன்று 53 நாடுகளில், உறுப்பினர்களை பெறும் அளவிற்கு வளர்ந் திருக்கிறது. வாரந்தோறும் இதன் உறுப்பினர்கள் ஏதாவது நல்லது செய்த வண்ணம் இருக்கின்றனர்.அமெரிக்காவை காத்ரீனா சூறாவளி உலுக்கிய பிறகு, அப்பகுதியில் பாதிக்கப் பட்டவர் களுக்கு தேவை யான உடைகள் மற்றும் உணவுப் பொருட்களை சேகரித்து தரும் பணியை இவர்கள் மேற்கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர், அங்குள்ள பள்ளிகளில் மாணவர் களுக்கு ஸ்லேட்டு, புத்தகம் கூட இல்லை என்பதை குறிப்பிட்டு, அவர்களுக்கு நோட்டு, புத்தகம், பென்சில் அனுப்பி வைக்கலாமே என்று யோசனை தெரிவித்தார். இந்த யோசனை ஏற்கப்பட்டு, பென்சில், பேனா, நோட்டு, புத்தகங்களை அனுப்பி வைக்கு மாறு கேட்டுக் கொள்ளப் பட்டது. அன்றிலிருந்து இன்று வரை யாராவது ஒருவர் ஆப்கானிஸ் தானுக்கு இந்த தளத்தின் மூலம் பென்சில் உள்ளிட்ட வற்றை அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். இதே போல ஈராக்கில் உள்ள ராணுவ வீரர்களுக்கு 3000 கம்பிளி போர்வைகள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. இந்த தளத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட செயல்களுக்கு என்று நீளமான பட்டியல் இருக்கிறது. இந்த செயல்களில் உலகம் முழு வதும் உள்ளவர்கள் பங்கேற் கின்றனர் என்பது தான் விசேஷம்.நல்ல செயல்கள் பற்றிய நல்ல செய்தியை உறுப்பினர்களுக்கு இந்த தளம் இமெயில் அனுப்பி வைக்கிறது.அதோடு உலகில் தாங்களாகவே நல்லது செய்பவர்கள் பற்றியும், இந்த தளம் அறிமுகம் செய்து வருகிறது. உறுப்பினர்களும், இத்தகைய அனு பவங்களை பகிர்ந்து கொள்ளலாம். உதவி செய்வது உன்னதமாக உணர வைக்கும் என்று குறிப்பிடும் "டெப்பி' நீங்களும் நைச ஹாலிக் ஆகுங்கள் என்கிறார். அதாவது நல்லதுக்கு அடிமையாகுங்கள் என்கிறார்.

கம்ப்யூட்டரே மெட்டுப் போடு

ஆர்கெஸ்ட்ரா வேண்டாம். இசைக் கலைஞர்கள் தேவை இல்லை. கம்ப்யூட்டரை மட்டும்வைத்துக் கொண்டு மெட்டுப்போட்டு விடலாம் என்கிறார் கெர்ஷான் சில்பர்ட். அவர் ஒன்றும் சும்மாசொல்லவில்லை. இதற்கான சாப்ட்வேரையும் உருவாக்கிவிட்டு தான் சொல்கிறார்.
.
அவரது சாப்ட்வேரை ஒரு டிஜிட்டல் இசையமைப்பாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள். "எம்ஓஆர்' என்று அழைக்கப்படும் அந்த சாப்ட்வேரை கொண்டே புதிய மெட்டுக்களை போடச் சொல்லலாம். ஆர்கெஸ்ட்ரா முன் நின்றபடி, கைகளை அசைத்து பாட வைப்பது போல், இசை ஞானம் உள்ளவர்கள் இந்த சாப்ட்வேர் உதவியோடு கம்ப்யூட்டர் முன் அமர்ந்தபடி இசைக் குறிப்புகளை கட்டளைகளாக வழங்கி மெட்டுக்களை மலர வைத்துவிட முடியும். அதற்காக இந்த சாப்ட்வேர் இளையராஜாவுக்கோ, ஏ.ஆர். ரஹ்மானுக்கோ போட்டி என்று நினைத்து விடுவதற்கில்லை. அவர் களைப் போன்ற இசையமைப்பாளர்கள் இசைக் குறிப்புகளை கொண்டு புதிய மெட்டுகள் அல்லது பின்னணி இசையை உருவாக்கி பார்ப்பதற்கான சாப்ட்வேர் இது.மனதில் உள்ள மெட்டை, பாடலாக ஒலிக்கச் செய்து கேட்டுப் பார்க்கும் ஆற்றல் திறமையான இசைக் கலைஞர்களுக்கு உண்டு என்றாலும், பாடல் பதிவுக்கு முன்பாக, இசைக் கலைஞர்கள் ஒத்திகை செய்ய வைத்து மெட்டுக்கள் ஒலிக்கும் விதம் சரியாக இருக்கிறதா என சோதித்து பார்க்கும் தேவை இருக்கவே செய்கிறது. தன்னுடைய சாப்ட்வேர், இந்த ஒத்திகை பார்க்கும் பணியை கச்சிதமாக நிறைவேற்றித்தரும் என்கிறார் சில்பர்ட், இசையமைப் பாளர்கள் தங்கள் மனதில் உள்ள இசைக் குறிப்புகளை இந்த சாப்ட் வேரிடம்சொன்னால், ஆர்கெஸ்ட்ரா இசைத்து காண்பிப்பது போல, சாப்ட்வேர் மெட்டமைத்து காட்டி விடும். அதில் தேவையான மாற்றங்களை சொன்னால், திருத்தங் களை மேற்கொண்டு புதிதாக மெட்டமைத்து காண்பிக்கும்.சாப்ட்வேர் உதவியுடன் இசைய மைப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. உண்மையில் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இசை அமைப்பது என்பது முழுவதும் தொழில்நுட்ப மயமாகி இருக்கிறது. சின்தசைசர், மின்னணு கீ போர்டு, மின்னணு கித்தார் என எல்லாமே தொழில்நுட்பத்தை தழுவிக் கொண்டிருக்கின்றன. இசைக் குறிப்புகளின் அடிப்படையில் ஒலி களை உருவாக்கித்தரும் சாப்ட் வேரும் பழக்கத்தில் இருக்கின்றன.ஆனால் இவற்றை எல்லாம் விட, தனது சாப்ட்வேர் முற்றிலும் மாறுபட்டது, மேம்பட்டது என்கிறார் சில்பர்ட். சாப்ட்வேர் உருவாக்கும் இசை உயிரோட்டம் இல்லாமல் ஒருவித செயற்கை தன்மையோடு இருக்கும். அதனை கேட்கும் போதே இயந்திரத் தனத்தை தவறாமல் உணரலாம் என்கிறார் சில்பர்ட்.ஆனால் தான் உருவாக்கி உள்ள சாப்ட்வேர் படைக்கும் இசை மனித தன்மை கொண்டதாக இருக்கும் என்பதை சிறப்பு என்கிறார் இவர்.ஒவ்வொரு இசைக் குறிப்புக்கும் ஏற்ற ஒலியை எழுப்பவல்ல சாப்ட்வேரை உருவாக்கி விடுவது சுலபம்தான். அவற்றைக் கொண்டே, மெட்டுக்களையும் அமைக்கலாம். இந்த ஒலிகளில் ஜீவனைத்தவிர மற்ற எல்லாமும் இருக்கும் என்கிறார் சில்பர்ட். இசை என்பது வெறும் ஒலிச் சேர்க்கை அல்லவே! நுட்பமான உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய உயிரோட்டம் நிரம்பியதாக அல்லவா இசை விளங்குகிறது. தேர்ச்சி பெற்ற இசைக் கலைஞரால் சற்று அழுத்தம் கொடுப்பது அல்லது லேசான இடைவெளி விடுவதன் மூலம் ஒரு ஒலிக்குறிப்பிற்கு கூடுதல் உணர்வை ஏற்படுத்தி, இசை அனுபவத்தை எங்கேயோ கொண்டு போய் விட முடியும். ஐய்யோ பாவம் சாப்ட்வேரிடம் இந்த நெளிவு சுளிவுகளை எதிர்பார்க்க முடியாது. இந்த அளவுக்கு திறமை படைத்தது என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவுக்கு இசைக் கலைஞர்களுக்கு சாத்தியமாகும் நுணுக்கமான தன்மையை கொண்ட இசை சாப்ட்வேரை சில்பர்ட் உருவாக்கி இருக்கிறார். ஒலிக்குறிப்புகளை மட்டும் அல்லாமல் அதனுடன் சொல்லப்படும் நுட்பமான குறிப்புகளை புரிந்து கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்டதாக இதனை சில்பர்ட் உருவாக்கி உள்ளார். உதாரணத்திற்கு ஒலிக்குறிப்பு, சற்றே உருக்கமானதாக இருக்க வேண்டும் என தெரிவித்தால் சாப்ட்வேர் அதனை புரிந்து கொண்டு, ஒலியின் தன்மையை அதற்கேற்ப மாற்றித்தரும். இப்படி இசையில் உள்ள நுட்பமான சங்கதிகளை உணரும் திறன் கொண்டதால் இதற்கு மியூசிக் ஆப்ஜக்ட்ஸ் ரிககனைஷன் புரோ கிராம் என பெயரிட்டுள்ளார். இந்த சாப்ட்வேர் மெட்டு போட்டுத் தந்தால் அது கம்ப்யூட்டர் போட்ட மெட்டு என கண்டுபிடிக்க முடியாதபடி இயற்கை யானதாக இருக்கும் என்கிறார் அவர். இதனை சோதனைக்கு உட்படுத்தி நிரூபித்தும் காட்டியிருக்கிறார். இளம் வயதில் பியானோ இசைக் கலைஞராக விளங்கிய சில்பர்ட் பின்னர் பியானோ பழுதுபார்க்கும் பணியையும் செய்து வந்தார். அதன் பிறகு ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நண் பருடன் பேசிக் கொண்டிருந்த போது, அந்நிறுவனம் மெட்டமைப்பதற்கான சாப்ட்வேரை உருவாக்குவது பற்றி கேள்விபட்டார். அப்போது ஏற்பட்ட ஆர்வம் அவரே இத்தகைய சாப்ட்வேரை உருவாக்கும் முயற்சி யில் ஈடுபட வைத்தது. இரண்டு ஆண்டு உழைப்பிற்கு பிறகு இந்த சாப்ட்வேரை உருவாக்கினார். இப்போது தன்னுடைய சில்வர் மியூசிக் நிறுவனம் மூலம் இதனை விற்பனை செய்து வருகிறார். விளம்பரங்களுக்கான இசை மற்றும் பின்னணி இசை போன்றவற்றை உருவாக்க இந்த சாப்ட்வேரை பயன்படுத்தலாம். மெட்டு எப்படி வந்திருக்கிறது என தெரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும். இசை சாப்ட்வேரில் இது ஒரு முக்கிய மைல்கள் என்று கூறும் சில்பர்ட் அடுத்ததாக எழுத்துக்களை படித்து காட்டக் கூடிய சாப்ட்வேரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதாவது மனிதர்களை போலவே ஏற்ற இறக்கங்களுடன் சொற்களின் அர்த்தத்தை புரிந்து கொண்டு படிக்கும் சாப்ட்வேரை உருவாக்கப்போவதாக சொல்கிறார்.

வீடியோவுக்கு ஒரு வழி

இன்டெர்நெட் தகவல் நெடுஞ் சாலை என்று குறிப்பிடப்படுவதாலோ என்னவோ, நெடுஞ்சாலையில் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சனைகளை இன்டெர்நெட்டிலும் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால் நெடுஞ்சாலையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சுலபமாக தீர்வு பிறப்பதில்லை. இன்டெர்நெட்டில் அப்படியில்லை.
.
இன்டெர்நெட்டை பாதிக்கக் கூடிய பிரச்சனைக்கு யாராவது ஒருவர் புத்திசாலித்தனமான தீர்வை முன்வைத்து விடுகிறார். தகவல் நெடுஞ்சாலையான இன்டெர் நெட்டில் வேகத்தில் பாதிக்கக் கூடிய போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு இஸ்ரேலை சேர்ந்த வாலிபர் ஒருவர் தன்னுடைய நிறுவனத்தின் மூலம் புதுமையான தீர்வை வழங்கியுள்ளார்.இன்டெர்நெட்டில் தகவல்களை பரிமாறிக் கொள்வதில் வேகம் ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. அதிலும் பிராடுபேண்ட் வருகைக்கு பிறகு தகவல்கள் தங்கு தடையின்றி பாய தொடங்கி விட்டன. ஆனால் வீடியோ யுகத்தின் வீழ்ச்சி இந்த வேகத்திற்கு அணை போட்டிருக்கிறது. யுடியூப் போன்ற தளங்களின் மூலம் வீடியோ கோப்பு களை எளிதாக பார்க்கவும், பரிமாறிக் கொள்ளவும் முடிவதால் லட்சக்கணக் கான வீடியோ கோப்புகள் இன்டெர் நெட்டில் குவிந்து கிடக்கின்றன.இதை தவிர திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளும் வீடியோ கோப்புகளாகி இன்டெர்நெட்டில் நிறைந்திருக்கின்றன. வீடியோ கோப்புகளை பார்க்கும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த சுமை தாங்காமல் இன்டெர்நெட் தடுமாற தொடங்கி இருக்கிறது. வீடியோ கோப்புகள் டவுன்லோடாக அதிக நேரம் தேவை என்பதால் இணையவாசிகள் அவற்றை விரை வாக பார்ப்பது பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வரும் காலத்தில் மேலும் அதிக அளவில் வீடியோ கோப்புகள் பதிவேற்றப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மேலும் பலர் இன்டெர்நெட் மூலம் வீடியோ நிகழ்ச்சிகளை பார்க்க முன்வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. இப்படியொரு நிலை ஏற்பட்டால் இன்டெர்நெட் தாங்க முடியாமல் முடங்கிப் போகலாம் என்றும் கூறப்படுகிறது.வீடியோ பெருக்கத்திற்கு ஏற்ப இன்டெர்நெட்டின் உள்கட்டமைப்பு வசதியையும் மேம்படுத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது அத்தனை சுலபமல்ல. இதற்கு பெரும் முதலீடு தேவை. எனவே வருங்காலத்தில் வீடியோ கோப்புகளால் ஏற்படக் கூடிய பிரச்சனையை எப்படி சமாளிப்பது என நிபுணர்கள் கவலைப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இஸ்ரேலை சேர்ந்த யமேனி எனும் வாலிபர் இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வை முன்வைத்துள்ளார்.இன்டெர்நெட்டின் அடிப்படை வசதியை மேம்படுத்தாமல் தற்போதுள்ள நிலையை கொண்டு வீடியோ கோப்புகள் வேகமாக டவுன்லோடு ஆகக் கூடிய வழியை அவர் உருவாக்கி உள்ளார். இதனை ஆரூட்ஸ் எனும் சேவையின் மூலம் அவர் வழங்கி வருகிறார். வீடியோ கோப்புகளை வேகமாக டவுன்லோடு செய்ய உதவக் கூடிய சாப்ட்வேர்கள் ஏற்கனவே இருக் கின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இந்த ஆரூட்ஸ் சேவையை அவர் உருவாக்கி இருக்கிறார்.இன்டெர்நெட் உலகில் அதிகம் பயன்படுத்தப்படாத மல்டி காஸ்ட்டிங் எனும் வசதியை கொண்டு இந்த சேவையை அவர் உருவாக்கி உள்ளார். குறிப்பிட்ட ஒரு தகவல் அல்லது வீடியோ கோப்பை இன்டெர்நெட் நிறுவனங்கள் ஒளிபரப்பும் போது அவற்றை ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான முறையும் ஒளிபரப்பலாம். இதனைத்தான் மல்டி காஸ்ட்டிங் என்று சொல்கின்றனர்.ஆரூட்ஸ் சேவையின் மூலம் வீடியோ கோப்புகள் அனைத்தையும் இப்படி லட்சக்கணக்கான முறை ஒளிபரப்ப வேண்டும். இவ்வாறு ஒளிபரப்பப் படும் தகவல்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கம்ப்யூட்டர் ஹாட் டிஸ்க்கில் வந்து அமர்ந்து கொள்ளும். அவர்கள் எப்போது விருப்பப்படு கின்றனரோ அப்போது அந்த வீடியோவை பார்த்துக் கொள்ளலாம்.ஒரே நேரத்தில் பலர் வீடியோவை பார்க்க முற்படும்போதுதான் வேகம் பாதிக்கப்படுகிறது. இதனை சமாளிக்க முதலில் ஒளிபரப்பும் போது பலரை சென்றடையும் வகையில் ஒளிபரப்பி விட்டால் பின்னர் பிரச்சனை வராது எனும் யுக்தியை ஆரூட்ஸ் சேவை அடிப்படையாக கொண்டிருக்கிறது.வீடியோ சேவை வழங்கும் நிறுவனங் கள் இணையவாசிகள் அதிக அளவில் குறிப்பிட்ட வீடியோ கோப்பை பார்க்கக் கூடும் என்று தெரிந்தால் அதனை முதலிலேயே மல்டி காஸ்ட்டிங் முறையில் ஒளிபரப்பி விட வேண்டும். இப்படி செய்தால் பின்னர் வேகக் குறைவு என்ற பிரச்சனையே ஏற்படாது. அதே நேரத்தில் இணையவாசிகளும் தங்களுக்கு தேவையான நேரங்களில் இதனை பார்த்துக் கொள்ளும் வசதி உண்டு.தற்போதுள்ள இன்டெர்நெட் உள்கட்டமைப்பு வசதியின் மூலமே இது சாத்தியமாகும் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். அதாவது புதிய மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் போன்ற வற்றை கட்டாமலேயே போக்குவரத்து நெரிசலுக்கு விடை காண்பது போல இந்த தீர்வு அமைந்துள்ளது.

குற்றங்களுக்கு ஒரு விக்கி

வரைபடத்தை பார்த்தே சென்னை நகரில் எந்த இடங்களில் எல்லாம் குற்றங்கள் அதிகம் நடக்கின்றன என்று தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?
.
அப்படி தெரிந்து கொள்ள முடிந்தால் குறிப்பிட்ட இடத்தில் வழிபறி அதிகம் நடந்து வருவதை உணர்ந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கலாம் அல்லவா? அதே போல் வேறொரு இடத்தில் இரவு நேர திருட்கள் திடீரென அதிகரித்து வருவதை தெரிந்து கொள்ள முடிந்தால் அதற்கேற்ப தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் அல்லவா?இவை எல்லாம் அப்படி ஒன்றும் கஷ்டமான விஷயங்களும் இல்லை! மேலும் சென்னை நகரம் என்றில்லை. உலகின் வேறு எந்த நகருக்கும் கூட பொருந்தி வரக்கூடிய விஷயம்தான்!இதற்கு நமக்கு தேவைப்படுவதெல்லாம் விக்கி கிரைம்ஸ் (தீடிடுடி ஞிணூடிட்ஞுண்.ணிணூஞ்) போன்றதொரு இணையதளம்தான்!கால்பந்துக்கு பெயர் பெற்ற தென்னாப்பிரிக்க நாடான பிரேசிலில் எந்தெந்த இடத்தில் எந்த வகையான குற்றங்கள் நடக்கின்றன என்பதை பார்த்த மாத்திரத்திலேயே இந்த தளம் உணர்த்தி விடுகிறது. அதுவும் அழகாக அந்நாட்டின் வரைபடத்தின் மீது இந்த விவரங்கள் சுட்டிக் காட்டப்படுகிறது.பிரேசிலின் டிஜிட்டல் வரைபடத்தின் மீது கொடி பறப்பது போல சின்ன சின்ன கம்பங்கள் மின்னிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு கம்பத்திற்கு பின்னும் ஒரு குற்றம் நடைபெற்றிருக்கிறது என்று பொருள். அந்த கொடி கம்பத்தை கிளிக் செய்தால் அங்கு எப்போது என்ன குற்றம் நடந்தது என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.கொடிக்கம்பங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தால் அந்தப் பிராந்தியத்தில் குற்றங்கள் குறைவாக இருப்பதற்கான அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம்.மாறாக நெரிசல் நேர போக்குவரத்து போல கொடிக்கம்பங்கள் அடர்த்தி யாக இருந்தால் அங்கு குற்றங்கள் அதிகம் என உஷாராகலாம்.இதை தொடர்ந்து கவனிப்பதன் மூலமே குற்றங்களின் போக்கையும் அவற்றின் எண்ணிக்கை கூடுகிறதா, குறைகிறதா போன்ற விவரங்களை யும் தெரிந்து கொள்ளலாம்.சுருக்கமாக சொன்னால் குற்றங்களுக்கான வரைபடமாக இந்த தளம் விளங்குகிறது.அட பரவாயில்லையே, நல்ல விஷயமாக இருக்கிறதே. பிரேசில் போலீசுக்கு ஒரு சபாஷ் போடலாமே என்று அந்நாட்டு காவல் துறையை பாராட்ட நினைத்தால் கொஞ்சம் பொறுங்கள், இந்த தளத்திற்கும், பிரேசில் காவல் துறைக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை. இதன் பின்னே இருப்பது அந்நாட்டு பொதுமக்கள்தான்!"விக்கி கிரைம்ஸ்' என்ற பெயரை பார்த்தவுடனேயே இது சாமான்யர்களின் பங்களிப்பு சார்ந்த தளமாக தான் இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டிருக்கலாம்!ஆம்! சாமான்ய நிபுணர்களின் பங்களிப்போடு உருவான மகத்தான இன்டெர்நெட் கலைக்களஞ்சியமான புகழ்மிக்க விக்கிபிடியாவைப் போல இந்த தளமும், குற்றங்களுக்கான விக்கிதான்!பிரேசில் நாட்டில் போர்டலேசா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் அறிவியல் பேராசிரியராக இருக்கும் டாக்டர் வாஸ்கோ பர்டாடோ என்பவர்தான் இந்த தளத்தை உருவாக்கியவர். மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவியலை பயிற்றுவிப்பதோடு கம்ப்யூட்டர் சார்ந்த ஆய்வுப்பணிகளிலும் "பர்டாடோ' ஆர்வம் மிக்கவர். ஆய்வுப்பணி சார்ந்த திட்டங்களில் அவர் தனது மாணவர்களையும் ஈடுபடுத்தி வருகிறார். கம்ப்யூட்டர் சார்ந்த அறிவை நடைமுறை பிரச்சனைகளுக்கு தீர்வு காண எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதே இவரது பிரதான நோக்கமாக இருக்கிறது.அந்த வகையில்தான் குற்றங்களுக் கான டிஜிட்டல் வரைபடமாக விக்கி கிரைம்சை உருவாக்கி உள்ளார்.திருட்டுக் கொடுப்பதோ, வழிபறி ஆசாமிகளிடம் சிக்கிக் கொள்ளும் அனுபவமோ யாருக்கு வேண்டு மானால் ஏற்படலாம். இத்தகைய நேரங்களில் பொருட்களை பறிகொடுத்தவர்கள் (அ) இந்த சம்பவத்திற்கு சாட்சியாக இருந்தவர்கள் செய்வது என்ன? பலர் போலீசில் புகார் கொடுக்க முற்பட்டாலும் பெரும்பாலானோர் தங்களுக்கு நேர்ந்த அனுபவம் பற்றி தெரிந்தவர்களிடம் புலம்புவதோடு நிறுத்திக் கொள்வதாக டாக்டர் வாஸ்கோ கூறுகிறார்.காவல்துறை மீதான அவநம்பிக்கை மற்றும் நாம் ஏன் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பரவலாக இருப்பதாலேயே பெரும் பாலானோர் புகார் அளிக்க முன் வருவதில்லை என்கிறார் அவர்.புகார் கொடுக்கின்றனரோ இல்லையோ, நடந்த சம்பவத்தை நண்பர்கள், தெரிந்தவர்களோடு பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றனர் அல்லவா? அதற்காக என்று ஒரு இணைய தளத்தை அமைத்துக் கொடுத்தால் அதுவே சொல்லாத சேதிகளை சொல்லுமே என்று நினைத்தார். இதன் பயனாக உருவானதே "விக்கி கிரைம்ஸ்'.திருட்டுக் கொடுக்க நேர்ந்தவர்கள், வழிபறிக்கு ஆளானவர்கள் (அ) கொள்ளை அடிக்கப்பட்டவர்கள் அந்த விவரத்தை இந்த தளத்தின் மூலம் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் நுழைந்து பெயர் மற்றும் இமெயில் முகவரியை தெரிவித்த பின் வரைபடத்தில் குற்றம் நடந்த இடத்தை தேர்வு செய்து என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டும். பின்னர் அந்த இடத்தில் குற்றத்துக்கான கொடிகம்பம் தோன்றி நிற்கும். என்ன வகை குற்றம் என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம். நடந்த குற்றத்தை நேரில் பார்த்த சாட்சிகளும், அது பற்றிய விவரத்தை பதிவு செய்யலாம்.கூகுலின் வரைபட சேவை இதற்காக பயன்படுத்திக் கொள்ளப் பட்டிருக்கிறது.இதனால் குற்றங்களுக்கு தீர்வு பிறக்க வழியில்லை என்றாலும் குற்றங்கள் அதிகம் நிகழும் பகுதியை தெரிந்து கொள்ள நிச்சயம் உதவியாக இருக்கும். அது மட்டுமல்லாமல் குற்றங்களை புகார் செய்யும் சமூக கடமையை வம்பு வழக்கு என்ற அச்சம் இல்லாமல் பாதுகாப்பாக அதனை நிறைவேற்றலாம்.தற்போது குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் காவல் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. காவல் துறை ஒரு போதும் குற்ற நிலவரத்தை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொண்டதில்லை. அடக்கி வாசிப்பது, மூடி மறைப்பது போன்ற உத்திகளை எல்லாம் பின்பற்ற தயங்க மாட்டார்கள். இதை மீறி நாட்டு நடப்பை உலகத்தின் அடிப் படையில்தான் தெரிந்து கொள்ள முடியும். எனவே குற்றங்கள் சார்ந்த புரிதல் மிகைப்படுத்தப் பட்டதாகவும் அமைந்து விடலாம்.ஆனால் விக்கி கிரைம்ஸ் போன்ற தளத்தின் மூலம் இத்தகைய விவரத்தை சாமான்யர்களே உருவாக்கி கொள்ளலாம்!

எங்கேயும் என் கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டருக்குள் ஒரு கம்ப்யூட்டர் உருவாக்கி கொண்டு, அந்த கம்ப்யூட்டரை எங்கே சென்றாலும் எடுத்துச் செல்ல முடிந்தால் எப்படி இருக்கும்? ஒரு சின்ன திருத்தம். அந்த கம்ப்யூட்டரை உடன் எடுத்துச்செல்ல முடியாது. ஆனால் எங்கு சென்றாலும் அங்கே இருக்கும் கம்ப்யூட்டருக்குள் இந்த கம்ப்யூட்டரை அணுக முடியும்.கம்ப்யூட்டருக்குள் ஒரு கம்ப்யூட்டர் என்றவுடன் ஏதோ மாயம் போல் இருக்கும். ஒரு விதத்தில் மாயம்தான்!கம்ப்யூட்டர் உலகில் இந்த மாயத்திற்கு வர்ச்சுவல் கம்ப்யூட்டர் என்று பெயர். அரூப கம்ப்யூட்டர் என்று வேண்டுமானாலும் சொல்லலாம் ஸ்துல வடிவில் இல்லாத ஒரு கம்ப்யூட்டரை நமக்கென உருவாக்கி கொள்வதை தான் இப்படி சொல்கின்றனர்.அதாவது கம்ப்யூட்டர் ஜடப் பொருளாக இல்லாமல், இன்டெர் நெட் வெளியில் உருவாக்கப் பட்டிருக்கும். இன்டெர்நெட்டில் வீற்றிருப்பதால் இந்த கம்ப்யூட்டரை எங்கிருந்து வேண்டுமானால் இயக்கி கொள்ளலாம். கம்ப்யூட்டர் உலகில் தற்போது இந்த கருத்தாக்கம்தான் பிரபலமாக இருக்கிறது. இதனை மேலும் எளிமையாக்கும் வகையில் இஸ்ரேல் நிறுவனம் ஒன்று கோஸ்ட் (எ.டணி.ண்t) என்னும் பெயரில், ஒவ்வொருவரும் தங்களுக்கான அரூப கம்ப்யூட்டரை உருவாக்கி கொள்ளும் சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. இந் நிறுவனத்தின் இணைய தளமான "எ.டணி.ண்t.ஞிணிட்' முகவரிக்கு சென்றால், நமக்கான அரூப கம்ப்யூட்டரை சுலபமாக உருவாக்கி கொண்டு விடலாம்.கோஸ்ட் என்றால், குளோபல் "ஹோஸ்டட் ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ்' என்பதன் சுருக்கமாகும். இன்டெர்நெட்டில் உருவாக்கப்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டம் என்றும் இதனை புரிந்து கொள்ளலாம். விண்டோஸ், லினக்ஸ் , மேக் போல இதுவும் ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம். பொதுவான ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் அதனை பொருத்த ஒரு கம்ப்யூட்டர் தேவை. ஆனால் கோஸ்ட் ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன் படுத்த கம்ப்யூட்டரே தேவையில்லை. அதாவது குறிப்பிட்ட ஒரே கம்ப்யூட்டர் தேவையில்லை. (அ) சொந்தமாக கம்ப்யூட்டர் தேவையில்லை. இமெயில் முகவரி கணக்கை உருவாக்கி கொள்வது போல, எந்த கம்ப்யூட்டரில் இருந்தும், இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தை தருவித்துக்கொள்ள முடியும். அதன்பிறகு, இமெயில் முகவரி கணக்கை திறந்து பயன்படுத்துவது போலவே எந்த கம்ப்யூட்டரில் இருந்து வேண்டுமானாலும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.சொந்தமாக கம்ப்யூட்டர் இல்லாதவர்களுக்கு இதன் அருமை சுலபமாக புரிந்து விடும். அலுவலகத்தில் கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போது, ஒரு கட்டுரையை டைப் செய்து, தனி போல்டரில் சேமித்து வைக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் வீட்டுக்கு வந்த பிறகு (அ) வேறு ஒரு இடத்திற்கு சென்ற பிறகு, அந்த கட்டுரையில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம். அப்போது, ஒன்றும் செய்ய முடியாது. மறுநாள் அலுவலகம் செல்லும் போதுதான் மீண்டும் அந்த கட்டுரையில் கையை வைக்க முடியும். இதே போல வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்கள் அதில் சேமித்து வைத்திருக்கும் படங்களையோ, கோப்புகளையோ வேறொரு இடத்தில் இருக்கும் போது பயன்படுத்த நினைத் தாலும் அது சாத்தியம் இல்லை.இது போன்ற நேரங்களில், கம்ப்யூட்டரில் உறைந்திருக்கும் வர்ச்சுவல் கம்ப்யூட்டர் கருத்தாக்கம் கைகொடுக்கிறது. தனக்கென வர்ச்சுவல் கம்ப்யூட்டரை உருவாக்கி கொள்ளும் நபர், கோப்புகளை சேமிக்கும் போது, அதனை நேரடியாக வர்ச்சுவல் கம்ப்யூட்டரில் சேமித்து வைக்கலாம். அதன் பிறகு எப்போது தேவைப்பட்டாலும், அந்த கோப்புகளை அணுக முடியும். அநேக இணைய சேவைகளை இப்படி கம்ப்யூட்டரை சார்ந்திராமல், இன்டெர்நெட்டிலேயே சேமித்து இஷ்டம் போல பயன்படுத்திக் கொள்ளும் வசதி இருக்கிறது. உதாரணத்திற்கு புகைப்படங்களை எல்லாம் இன்டெர்நெட்டிலேயே நமக்கென தனி இடத்தில் சேமித்து வைக்கலாம். மைக்ரோ சாப்டின் "வேர்டு' ஆவண குறிப்பேட்டை போலவே, இன்டெர்நெட்டில் கூகுல் உருவாக்கி உள்ள ஆவண குறிப்பேட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகைய தனித்தனி சேவைகளை எல்லாம் ஒருங்கிணைத்து, "கோஸ்ட்' வர்ச்சுவல் கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளது. யார் வேண்டுமானாலும் இந்த சேவையின் மூலம் தங்களுக்கான வர்ச்சுவல் கம்ப்யூட்டரை அமைத்துக் கொள்ளலாம். விண்டோஸ் போன்ற ஆபரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள அனைத்து அடிப்படையான அம்சங் களும் அதில் இருக்கும். எந்த கம்ப்யூட்டரில் இருந்து வேண்டு மானாலும் "இந்த' கம்ப்யூட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம். உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு இலவச வர்ச்சுவல் கம்ப்யூட்டரை உருவாக்கி கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தருவதே தங்கள் நோக்கம் என்று "கோஸ்ட்' நிறுவனம் தெரிவிக்கிறது.இந்த நிறுவனத்தின் பின்னே சுவாரசியமான கதையும் இருக்கிறது. இந்நிறுவனம் பாலஸ்தீன கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது என்பதை கவனிக்க வேண்டிய விஷயம். நிறுவனத்தை தொடங்கிய ஸ்கிரிபர் இஸ்ரேலைச் சேர்ந்தவர் என்னும் போது இதன் முக்கியத்துவத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம். இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே பலகாலமாக தீராமல் இருக்கும் பிரச்சனையையும், பகையையும் மீறி, இவர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணரான தரேக் பயோ என்பவரோடு இணைந்து செயல்பட்டு வருகிறார். கோஸ்ட் சேவையை உருவாக்கு வதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு பணிகளை பாலஸ்தீன சாப்ட்வேர் நிபுணர்களே உருவாக்கி வருகின்றனர்.இந்த நிறுவனத்தின் சார்பில் அமைதி முயற்சியை ஊக்குவிப்பதற்கான அறக் கட்டளை ஒன்று ஏற்படுத்தப் பட்டுள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியோடு எல்லைகளை கடக்கலாம் என்பதற்கும் கோஸ்ட் ஒரு உதாரணமாக திகழ்கிறது.
.